பொறியியல் படிப்பில் மாணவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக் கொண்டு, தனக்கு விரும்பிய இடம் கிடைக்குமா? எனக் காத்திருக்கும்போது கட்ட வேண்டியத் தொகையின் விவரத்தை பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது. 






 

பிஇ, பிடெக்., படிப்பில்  சேர்வதற்கு   https://www.tneaonline.org/  என்ற இணையதள முகவரியில்  விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில்   விண்ணப்பித்தவர்களில் தகுதியான 1,56,278 பேருக்கான தரவரிசைப் பட்டியல்  ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டது.   அவர்களில் சிறப்பு பிரிவினருக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 22ம் தேதி வரையில்  கலந்தாய்வு நடத்தப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரையில் நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில்பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. 

 

அதில் 10,11,12 ஆகிய தேதிகளில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை பூர்த்தி செய்தனர். தற்காலிக ஒதுக்கீடு 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. 13, 14ஆம் தேதிகளில் மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்தோ அல்லது வேறு கல்லூரியில் சேர்வதற்கான விருப்பத்தையோ பதிவு செய்துள்ளனர். 



 

முதல் சுற்றுக் கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14 ஆயிரத்து 546 பேரில் 12,294 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 11,626 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்தனர். 5233 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கும், 4269 மாணவர்கள் ’தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மேலே விரும்பிய இடத்தில்  சேரவும், காலியிடம் கிடைத்தால் அளிக்கவும்’ என கூறியுள்ளனர். 

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 278 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்து, 185 பேர் கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்தனர். 67 மாணவர்கள் கிடைத்த இடத்தில் சேரவும், மேலே விரும்பிய இடம் கிடைத்தால் சேர விரும்புவதாகவும் கூறியுள்ளனர். அதேபாேல் தொழிற்கல்விப்பிரிவில் இடங்களை தேர்வு செய்தவர்கள் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். 

 

பொறியியல் படிப்பில் முதல்முறையாக கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை தவிர்பதற்காக புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும்போதே, மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைத்தால் சேரலாம்.   

 

‘தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியில் சேர விரும்புகிறேன் அல்லது மேலே விரும்பிய கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைத்தாலும் சேர்வதற்கு காத்திருக்கிறேன்’ என தெரிவிக்கலாம். ஒதுக்கீடு பெற்ற பின்னர் காத்திருக்கும்போது, பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். 

 

அந்த கட்டண விபரங்கள் வருமாறு:

 

அண்ணாப் பல்கலைக் கழக வளாக கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள்- ரூ.12,000

 

அண்ணாப் பல்கலைக் கழக வளாக கல்லூரியில் சுயநிதிப் பாடப்பிரிவு- ரூ.20,000

 

அரசு பொறியியல் கல்லூரி - ரூ.2000

 

அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரி- ரூ.4000

 

அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரியில் (சுயநிதிப்பாடப்பிரிவு)- ரூ. 25,000

 

அரசு உதவிபெறும் , சுயநிதி பொறியியல் கல்லூரியில் (அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு ) - ரூ.27,500

 

அண்ணாமலை பல்கலைக் கழகம் -ரூ.20,000

 

ஏற்கனவே விரும்பிய இடத்தை தேர்வு செய்து , மேலே பதிவு செய்த நிலையில் , மேலே குறிப்பிட்ட அந்த கல்லூரியில் இடம் கிடைத்தால் அதனை பெறுவதற்கான ஒதுக்கீடு 25ஆம் தேதி (PROVISIONAL ALLOTMENT FOR UPWARD OPTED CANDIDATES) செய்யப்படும். 

 

அதனைத் தொடர்ந்து 2ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.