Engineering Counselling: பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு:
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ள முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க, 26 ஆயிரத்து 654 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3 வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ள சூழலில், துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எஸ்சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு பெறுகிறது.
கலந்தாய்வின்போது விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும்.
முடிந்த இரண்டு கட்ட கலந்தாய்வு:
மாநிலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 400-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில், 1.79 லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆன்லைன் மூலமாக நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 10ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, இரண்டு கட்ட கலந்தாய்வுகள் நடந்து முடிந்துள்ளன.
குவிந்து கிடக்கும் காலியிடங்கள்:
முதற்கட்டமாக முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை 22-இல் தொடங்கி ஜூலை 27 வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்கள் இருந்த நிலையில், அதில் 836 இடங்களில் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 198.50 கட் ஆஃப் உடன் இரண்டாவது இடத்தையும், வேலூர் மாணவர் சரவணன் 198.5 கட் ஆஃப் உடன் 3ஆவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.