இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வுக்கான அனைத்து நடைமுறைகளும் நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. அந்த வகையில் முதல் சுற்று கலந்தாய்வில் 13 ஆயிரத்து 893 விண்ணப்பதாரர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்து இருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
அதில் 5 ஆயிரத்து 887 பேர் இடங்களை உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். மேலும் 3 ஆயிரத்து 707 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே தேர்வு செய்திருந்த இடங்களில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த இடத்துக்கான கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும். அந்த வகையில் 3 ஆயிரத்து 707 பேரில், 3 ஆயிரத்து 46 பேருக்கு அவர்களின் முதன்மை விருப்ப இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து சேர்ந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2வது சுற்று கலந்தாய்வு இன்று காலையில் இருந்து தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் சுற்று கலந்தாய்வை போலவே, இந்த சுற்றிலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல், முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருத்தல், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. 2வது சுற்று கலந்தாய்வுக்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆன்லைனில் இருந்தபடியே இந்த கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்.