தமிழ்நாட்டில் பள்ளி இறுதி வகுப்பு தேர்வு முடிவுகளின் மூலம் சமூக, கல்வி நிலையில் வன்னியர்களின் மிக, மிக பிற்படுத்தப்பட்ட தன்மை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதம்:
’’தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டியது என்பதை கடந்த மே 8-ஆம் நாள் வெளியிடப்பட்ட 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மெய்ப்பித்திருக்கின்றன. அதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடைமுறை தொடங்கி விட்ட நிலையில், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தக் கோருவதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் நாள் வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களை பட்டியலிட்டால், அவற்றில் கடைசி 15 இடங்களைப் பிடித்த இராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றைத் தவிர மீதமுள்ள 12 மாவட்டங்களும் வடக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவை ஆகும்.
இவற்றையும் கடந்து இதில் தெரியவரும் இன்னொரு செய்தி என்னவென்றால், அனைத்து வட மாவட்டங்களுமே கடைசி 15 இடங்களில்தான் வந்திருக்கின்றன என்பது தான்; முதல் 20 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் ஒன்றுகூட வட மாவட்டங்கள் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் சராசரி தேர்ச்சி 94.05 விழுக்காடு ஆகும். வடக்கு மாவட்டங்களில் ஒன்று கூட இந்த சராசரியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தலைநகரமான சென்னையுடன் இணைந்திருந்தாலும் அவற்றால் சராசரி மதிப்பெண்களை எட்ட முடியவில்லை; கடைசி 15 இடங்களுக்கு மேலாக முன்னேற முடிய வில்லை. இவற்றுக்கான காரணங்களை ஆராயத் தேவையில்லை; அனைவரும் அறிந்தவைதான்.
44 ஆண்டுகளாகவே கடைசி இடம்
பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடிப்பது இப்போதுதான் நடக்கும் நிகழ்வு அல்ல. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 1980-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கடந்த 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத்தான் பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடித்ததற்கு காரணம், அம்மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையும் விட முதன்மையான காரணம் வட மாவட்ட மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள்தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியர்களும், பட்டியல் சமுதாயத்தினரும்தான். வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர் சமுதாய மக்களால் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில்தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை. மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மாணவர்களால் காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டுதான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்; அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் காரணம்
வாழ்வாதாரப்பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது. அதனால்தான் அவர்களும் தேர்வில் தோல்வியடைந்து, மாவட்ட தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் காரணமாகின்றனர். வன்னியர்களின் கல்வி மற்றும் சமூக நிலை மிக மோசமாக இருக்கிறது என்பதற்கு இதை விட வலிமையான சான்றுகள் தேவையில்லை. இதை இன்னொரு சான்றின் மூலமாகவும் மெய்ப்பிக்க முடியும். தேர்ச்சி விகிதத்தில் கடைசி 15 இடங்களில் வட மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களும் வட தமிழகத்தைச் சேர்ந்தவை இல்லை என்றாலும் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும்.
வன்னிய சமுதாயத்தின் பின்தங்கிய நிலைதான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை பின்னுக்கு இழுக்கின்றன என்பதை இதன்மூலம் உணரலாம். கல்வி, வேலைவாய்ப்பு, சமூகமேம்பாடு ஆகியவற்றின் தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால், அதற்கு வன்னியர்களின் கல்வி , சமூகநிலை மேம்பட வேண்டும்; அதற்கு மிகவும் விரைவாக வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை இத்தருணத்தில் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
அதிக அளவில் மது விற்பனை
கல்வியில் மட்டுமின்றி, பிற காரணிகளிலும் வட மாவட்டங்களின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் மது விற்பனையாவது வட தமிழகத்தில்தான். தமிழகத்திலேயே மிக அதிக அளவில் குடிசைகள் இருப்பதும் இந்த மாவட்டங்களில்தான்.
இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழ்நாடு மாநில பிரிவில் (கேடர்) நேரடியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை; 2020-ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக வன்னியர் ஒருவர் தமிழ்நாடு பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் அரசுத்துறை செயலாளர் மற்றும் அதற்கும் கூடுதலான நிலையில் 118 இ.ஆ.ப. அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர்கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது கவலையளிக்கும் உண்மை.
பதவிகளில் ஒருவர் கூட வன்னியர் கிடையாது
அதேபோல், காவல்துறையில் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) நிலை மற்றும் அதற்கு மேலான பதவிகளில் ஒருவர் கூட வன்னியர் கிடையாது. நூற்றாண்டுகளைக் கடந்த சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் இதுவரை வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த இருவர் மட்டும்தான் மூத்த வழக்கறிஞர் என்ற தகுதியை பெற்றுள்ளனர். அதிலும் கூட நடப்பாண்டில்தான் இரண்டாவது வழக்கறிஞருக்கு அந்தத் தகுதி கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களில் கடந்த ஆண்டு வரை ஒருவர் கூட வன்னியர் கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வன்னியர் ஒருவர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டை நான்தான் போராடிப் பெற்றுக் கொடுத்தேன். 1989-ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த கருணநிதிதான் அந்த இட ஒதுக்கீட்டை வழங்கினார். ஆனால், அதன் பயன்கள் இப்போது வன்னியருக்கு கிடைப்பதில்லை. இந்த சமூக அநீதியை மெய்ப்பிப்பதற்கு தமிழக அரசிடமே ஏராளமான புள்ளிவிவரங்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2020-ஆம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் முடிவுகள் வெளியிடப்பட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வுகளில் மாவட்ட துணை ஆட்சியர் பணிக்கு 18 பேரும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்கு 19 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றில் மாவட்ட துணை ஆட்சியர் பணிக்கு 3 இடங்களும், காவல் துணை கண்காணிப்பாளர் பணிக்கு 4 இடங்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் ஓரிடம் கூட வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை. பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு சிறிதளவுகூட சமூக நீதி கிடைக்கவில்லை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. இந்த சமூக அநீதியை போக்க வேண்டியது தமிழக முதலமைச்சராகிய தங்களின் கடமையாகும்.
400 நாட்களுக்கும் மேலாகி விட்டது
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 400 நாட்களுக்கும் மேலாகி விட்டது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதலில் வழங்கப்பட்ட 3 மாதக் கெடு நிறைவடைந்தது மட்டுமின்றி, கூடுதலாக வழங்கப்பட்ட காலக்கெடுவிலும் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. வன்னியர்களின் கல்வி, சமூக, வேலைவாய்ப்பு குறித்த தரவுகளைத் திரட்டும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருவதை நான் அறிவேன் என்றாலும், இன்னொருபுறம் 2023-24ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டதால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளை விரைவு படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மே 7ஆம் நாள் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 7ஆம் நாள் வாக்கில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையும் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியாகக் கூடும். அதற்கு இன்னும் மிகக்குறைந்த காலமே உள்ளது.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசின் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில் நடப்பாண்டிலாவது இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வன்னிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு 10.5% இட ஒதுக்கீடு எப்போது வரும்? என்று வினவுகின்றனர்.
எனவே, தமிழ்நாடு அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றவோ அல்லது அவசர சட்டமாக பிறப்பிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன்மூலம் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளை கருத்தில் கொள்ளாமல், மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும் நாளன்று, தமிழ்நாட்டில் எத்தகைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறையில் உள்ளதோ, அதைக் கடைபிடித்து இட ஒதுக்கீடு வழங்கப் படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.