மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை  2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

  இந்த உதவித்தொகையை வழங்க ரூ.14.90 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்‌ தொகையினை இரு மடங்காக உயர்த்தியும்‌ மற்றும்‌ 2013-2014-ஆம்‌ நிதியாண்டில்‌ இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும்‌ ஆணை வெளியிடப்பட்டது.


2018- 2019ஆம்‌ நிதியாண்டு முதல்‌ மாற்றுத் திறனாளிகள்‌ நலத்துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களில்‌ சுமார்‌ 52 நலத்‌ திட்டங்கள்‌ வரவு செலவுத்‌ திட்ட ஒதுக்கீட்டிற்குள்‌ செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள்‌ நல ஆணையருக்கு அதிகாரப்பகிர்வு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.


முன்னதாக 2023- 2024ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்‌போது முதலமைச்சர்‌, "மாற்றுத்திறன்‌ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ கல்வி உதவித்‌ தொகையினை இரு மடங்காக உயர்த்தி, 22,300 மாணவர்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ ரூ.700.00 இலட்சம்‌ கூடுதல்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌’’ என்னும்‌ அறிவிப்பினை வெளியிட்டார்.


இந்த நிலையில் மாற்றுத்திறன்‌ மாணாக்கர்களின்‌ சிறப்பு கல்வியினை ஊக்குவித்திட ஏதுவாக மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறையின்‌ மூலம்‌ தற்போது வழங்கப்பட்டு வரும்‌ கல்வி உதவித்‌ தொகை 2023-2024-ஆம்‌ ஆண்டு முதல்‌ 2 மடங்கு உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- (ரூபாய்‌ பதினான்கு கோடியே தொண்ணூறு லட்சத்து ஐம்பத்தொண்டாயிரம்‌ மட்டும்‌) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட செலவினத்தில்‌ ரூ.7,95,02,000 தொகையை 2023-2024-ஆம்‌ ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இருந்து மேற்கொள்ள வேண்டும்‌. மீதமுள்ள தொகை ரூ.6,95,50,000/- கூடுதல்‌ நிதியாக ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மேலே ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல்‌ செலவினம்‌ ரூ.6,95,50,000/- ஒரு "புதுத் துணைப்பணி" (New Instrument of Service) குறித்த செலவினம் ஆகும்‌. இதற்கு சட்டமன்றப்‌ பேரவையில்‌ ஒப்புதல்‌ பின்னர்‌ பெறப்படும்‌.


மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம்‌ முதற்கண்‌ எதிர்பாராச்‌ செலவின்‌ நிதியிலிருந்து முன் பணம்‌ பெறுவதன்‌ மூலம்‌ மேற்கொள்ளப்படும்‌. முன் பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள்‌ நிதித்‌ துறையில்‌ தனியாக பிறப்பிக்கப்படும்‌. அடுத்து வரும்‌ துணை மானியக்‌ கோரிக்கையில்‌ இச்செலவினம்‌ சேர்க்கப்பட்டு சட்டமன்றப்‌ பேரவையின்‌ ஒப்புதல்‌ பெறும்‌ வரையில்‌ நடப்பாண்டிற்கு தேவைப்படும்‌ செலவினத்தை சரியாகக்‌ கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியில் இருந்து முன்பணம்‌ பெறத்‌ தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள்‌ 1963-ல்‌ உள்ள அட்டவணை ஏ படிவத்துடன்‌ இவ்வரசாணையின்‌ நகலுடன்‌ இணைத்து நிதித்‌ துறைக்கு நேரடியாக அணுப்பி வைக்குமாறு மாற்றுத் திறனாளிகள்‌ நல இயக்குநர்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.