இந்தியா முழுவதும் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே, மத்திய, மாநிலக் கல்வி வாரியங்கள் நடத்தும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் அர்ச்சனா சர்மா அவஸ்தி அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது:


ஒன்றாம் வகுப்பு சேர்க்கை


’’இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 6 வயதுக்கு மேல் (6+ years) உள்ள மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.






2024- 25ஆம் கல்வி ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளது. உங்களின் மாநிலத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவிக்க வேண்டும்’’.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்கள் குழப்பம்


எனினும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. குறிப்பாக முன்னணி தனியார் பள்ளிகளில் டிசம்பர் மாதத்திலேயே சேர்க்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக 5 வயது நிறைவடைந்த குழந்தைகள் 1ஆம் வகுப்பிலும் 3 வயது முடிந்த குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும் சேர்க்கப்படுவர்.   


சிபிஎஸ்இ வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வயது வரம்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் மாநிலக் கல்வி வாரியத்தில் 5ஆம் வகுப்பே வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


பொதுத் தேர்வை எழுதும்போது சிக்கல் வருமா?


அதேபோல ஏற்கெனவே 5 வயது நிறைவடைந்து 1ஆம் வகுப்பில் சேர்ந்து அடுத்தடுத்த வகுப்புகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள், பொதுத் தேர்வை எழுதும்போது சிக்கலை எதிர்கொள்ள நேரிடுமா என்றும் குழப்பம் எழுந்துள்ளது. இதுகுறித்தும் மத்திய அரசு தெளிவை ஏற்படுத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.