டிஆர்டிஓ எனப்படும் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம்.

DRDO என்பது இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கிளையாகும். மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், முக்கிய பாதுகாப்பு அமைப்புகளில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதும் இதன் குறிக்கோள். ஆயுதப் படைகளுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்க DRDO செயல்படுகிறது.

இங்கு உள்ளுறைப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், டிஆர்டிஓ ஆய்வகங்கள் மற்றும் செயல் திட்டங்களில் உள்ளுறைப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் தங்களின் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் மூலமாக, உள்ளுறைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவரின் ஒப்புதல், கிடைக்கக்கூடிய இடங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆய்வக இயக்குநரின் விருப்பத்தைப் பொறுத்தது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டங்கள் மற்றும் பொது அறிவியலில் பட்டம் பெற்ற மாணவர்கள் DRDO-வில் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். DRDO இன்டர்ன்ஷிப் 2025க்கு விண்ணப்பிக்க 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதுகுறித்து டிஆர்டிஓ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பயிற்சியாளர்கள் DRDO ஆய்வகங்கள்/ நிறுவனங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சி முடிந்ததும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க DRDO எந்த வகையிலும் கடமைப்பட்டிருக்காது.

DRDO ஆய்வகங்கள்/ நிறுவனங்களுடன் மாணவர்கள் இணைக்கப்படும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, தனிப்பட்ட காயம் ஏற்பட்டால் DRDO எந்த இழப்பீட்டிற்கும் பொறுப்பேற்காது. பயிற்சி காலம் பொதுவாக பாடத்தின் வகையைப் பொறுத்து 4 வாரங்கள் முதல் 6 மாதங்கள் வரை இருக்கும். இருப்பினும், இது ஆய்வக இயக்குநரின் விருப்பத்திற்கு உட்பட்டது" என்று தெரிவித்துள்ளது.  முக்கிய அம்சங்கள் என்ன?

  • டிஆர்டிஓ ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்தே இண்டர்ன்ஷிப் வழங்கப்படும்.
  • ரியல் டைம் செயல்திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இந்தியா முழுவதும் டிஆர்டிஓவுக்கு 50 ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. அவை பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்து பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகின்றன.

ஊக்கத் தொகை எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.drdo.gov.in/drdo/scheme-internship-students