பி.வி.ஆர் சினிமாஸ்
இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனம் பி.வி.ஆர். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 1700 க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை. பி.வி.ஆர் திரையரங்குகளில் உணவு பண்டங்களின் விலை டிக்கெட் விலையை விட இரு மடங்கு அதிகம் இருப்பது ஒரு நெடு நாள் விமர்சனமாக இருந்து வருகிறது. அத்துடன் சொன்ன நேரத்தில் படத்தைத் தொடங்காமல் விளம்பரத்தை போட்டு தாமதிப்பது குறித்த விமர்சனமும் பி.வி.ஆர் நிறுவனம் மீது உள்ளது.
காலை 9 மணிக்கு காட்சி என்று டிக்கெட்டில் இருந்தால் 9 மணிக்கு தொடங்கும் விளம்பரங்கள் 15 நிமிடத்திற்கு ஓடியப் பின்னரே படம் தொடங்குகிறது. இதனால் கடுப்பான பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் பி.வி.ஆர் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்.
65 ஆயிரம் இழப்பீடு வாங்கிய இளைஞர்
பெங்களூரைச் சேர்ந்த அபிஷேக் கடந்த 2023 ஆம் ஆண்டு சாம் பகாதுர் படம் பார்க்க சென்றுள்ளார். 4:05 மணிக்கு தொடங்க வேண்டிய படம் விளம்பரங்கள் எல்லாம் முடிந்து 4: 25 க்கு தொடங்கியுள்ளது. படத்தை முடித்து 6:30 மணிக்கு மீண்டும் தனது வேலைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார் அபிஷேக் ஆனால் படம் தாமதமானதால் அவரது அன்றைய நாளுக்கான திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
படத்திற்கு முன்பாக அரசு விளம்பரங்கள் திரையிட வேண்டியது கட்டாயம் என்று பிவி.ஆர் தரப்பு வாதாடியது. ஆனால் படம் தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பாக அல்லது இடைவேளையின் போது இந்த விளம்பரங்களை திரையிடலாம் என நீதிமன்றம் மடக்கி பிடித்தது
அபிஷேக்கின் நேர விரயத்தை ஈடு செய்ய பி.வி.ஆர் நிறுவனம் அவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் , இதலான் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5000 ரூபாய் மற்றும் இந்த வழக்கிற்கு ஏற்பட்ட செலவிற்கு ரூ 10000 ரூபாயும் அபராதமாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 1 லட்சம் ரூபாய் நுகர்வோர் நல நிதியில் அபராதமாக செலுத்த வேண்டும் என்றுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.