அரசுத்‌ துறைகளில்‌ உள்ள காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படுவதை தாமதப்படுத்தும்‌ தி.மு.க. அரசுக்கு கடும்‌ கண்டனம்‌ தெரிவிப்பதாக தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஓ.பன்னீர் செல்வம்‌ தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“அரசுத்‌ துறைகள்‌, கல்வி நிலையங்களில்‌ காலியாக உள்ள 3.5 இலட்சம்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படும்‌”, “புதிதாக 2 லட்சம்‌ வேலைவாய்ப்புகள்‌ உருவாக்கப்படும்‌” என இரண்டு வாக்குறுதிகள்‌ தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ குறிப்பிடப்பட்டன. தி.மு.க.வின்‌ கணக்குப்படி பார்த்தால்‌, 2021 ஆம்‌ ஆண்டே அரசுத்‌ துறைகள்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களில்‌ 3.5 லட்சம் பணியிடங்கள்‌ காலி. தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள்‌கடந்துள்ள நிலையில்‌, காலிப்‌ பணியிடங்களின்‌ எண்ணிக்கை நிச்சயம்‌ அதிகரித்து இருக்கும்‌ என்பதில்‌ யாருக்கும்‌ மாற்றுக்‌ கருத்து இருக்க முடியாது.

கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும்‌ 2021 ஆம்‌ ஆண்டுகளில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ தேர்வுகள்‌ நடத்த முடியாத, சூழ்நிலை ஏற்பட்ட நிலையில்‌, தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்றவுடன்‌ தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பினை உயர்த்தியது. ஆனாலும்‌, பணியிடங்களை பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, வங்கிகளில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்‌ தேர்வு வாரியம்‌ ஆகியவை ஒவ்வொரு ஆண்டும்‌ பட்டதாரி நிலை, மேல்நிலைப்‌ பள்ளி நிலை ஆகியவற்றிற்கான தேர்வுகளை உடனுக்குடன்‌ நடத்தி அதன்‌ முடிவுகளை வெளியிடுகின்றன. 

திராபை மாடல் பயனற்ற அரசு

இந்த நிலையில்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ போட்டித்‌ தேர்வுகளை நடத்துவதில்‌ காலம் தாழ்த்துவது ஏற்றுக்‌கொள்ளக்‌ கூடியதல்ல. மாறாக ஏமாற்றம்‌ அளிக்கும்‌ செயல்‌.  இந்த நிலை நீடித்தால்‌ ஐந்தாண்டுகளில்‌ மூன்றரை லட்சம்‌ அல்ல, முப்பத்தைந்தாயிரம்‌ பணியிடங்களைக்‌ கூட தி.மு.க. அரசால்‌ நிரப்ப முடியாது. இதிலிருந்தே தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது தெள்ளத்‌ தெளிவாகிவிட்டது. இது “திராவிட மாடல்‌” அரசு அல்ல, “திராபை மாடல்‌” அரசு, அதாவது எதற்கும்‌ உபயோகமில்லாத, பயனற்ற அரசு.

தமிழ்நாடு அரசுத்‌ துறைகளிலும்‌ கல்வி நிலையங்களிலும்‌ லட்சக்கணக்கான காலிப்‌ பணியிடங்கள்‌ இருக்கின்ற சூழ்நிலையில்‌, இளைஞர்கள்‌ ஆவலோடு எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்த குரூப்‌ - 4, குரூப்‌ - 2, 2ஏ ஆகியவற்றிற்கான தேர்வுகளை 2023 ஆம்‌ ஆண்டு நடத்தாமல்‌ காலந்தாழ்த்துவது இந்த அரசு ஏதோ உள்நோக்கத்துடன்‌ செயல்படுகிறதோ என்ற சந்தேகம்‌ எழுகிறது. நிதிநிலை அறிக்கையில்‌, 'நிதிப்‌ பற்றாக்குறை'குறைந்துவிட்டது, “வருவாய்ப்‌ பற்றாக்குறை” குறைந்துவிட்டது என்று சொல்வதற்காக இதுபோன்ற காலந்தாழ்த்தும்‌ முயற்சியில்‌ அரசு ஈடுபட்டு இருக்கிறதோ என்ற சந்தேகமும்‌, வெளி முகமையின்‌ மூலமாக பணிகளை மேற்கொண்டு விடலாம்‌ என்ற நினைப்பில்‌ அரசு இருக்கிறதோ என்ற ஐயமும்‌இளைஞர்கள்‌ மனதில்‌ மேலோங்கி இருக்கிறது. 

இந்த லட்சணத்தில்‌ இரண்டு லட்சம்‌ புதிய வேலைவாய்ப்புகள்‌ உருவாக்குப்படும்‌ என்ற வாக்குறுதி வேறு! எல்லாம்‌ ஏமாற்று வேலை! பற்றாக்குறையை குறைக்கிறோம்‌ என்று சொல்லி இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுக்குமேயானால்‌, அது ஏழை, எளிய மக்களின்‌ வாழ்வாதாரத்தை, இளைஞர்களின்‌ ஒளிமயமான எதிர்காலத்தை குலைக்கும்‌ நடவடிக்கையாகும்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌.

மக்கள்‌ நலனுக்காக அல்ல..

அரசாங்கத்திற்கும்‌, மக்களுக்கும்‌ பாலமாக விளங்கி, அரசின்‌ நலத்‌ திட்டங்களை மக்களிடம்‌ கொண்டு போய்ச்‌ சேர்க்கும்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களை அவ்வப்போது நிரப்பினால்தான்‌ அரசு இயந்திரம்‌ நன்கு செயல்பட முடியும்‌, நலத்‌ திட்டங்கள்‌ மக்களைப் போய்‌ சென்றடையும்‌. லாபத்தை குறிக்கோளாகக்‌ கொண்டு செயல்படுபவை கார்ப்பரேட்‌ நிறுவனங்கள்‌. மக்கள்‌ நலன்களைக்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு செயல்படுபவை அரசுகள்‌. எனவே, அரசு என்பது மக்கள்‌ நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர, இலாபத்தை அடிப்படையாகக்‌ கொண்டு செயல்படக்கூடாது.

கடந்த ஒன்றரை ஆண்டுகால தி.மு.க. அரசின்‌ நடவடிக்கைகளைப் ‌பார்க்கும்போது, ஒரு கார்ப்பரேட்‌ நிறுவனம்‌ போல அரசு செயல்படுவது தெளிவாகத்‌ தெரிகிறது. தி.மு.க. அரசின்‌ இந்தச்‌ செயல்பாட்டிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத் ‌தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தி.மு.க. தேர்தல்‌ அறிக்கையில்‌ குறிப்பிட்டுள்ள மூன்றரை லட்சம்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்ப ஏதுவாக, இனி இருக்கின்ற மூன்றரை ஆண்டுகளில்‌ ஆண்டிற்கு குறைந்தபட்சம்‌ ஒரு லட்சம்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‌ என்றும்‌, 2023 ஆம்‌ ஆண்டிற்கான அரசுப்‌ பணித்‌ தேர்வுகள்‌ அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்றும்‌தமிழ்நாடு முதலமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.