டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதை பல்கலைக்கழக வேந்தரான முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா இன்று (நவ.21) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.  கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார். முன்னதாக, பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ.சாமிநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா விழாவில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான செளமியா மேற்கொண்டார்.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ’’இசைக்கும்‌, என்‌ குடும்பத்துக்கும்‌ நெருக்கமான உறவு உண்டு! என்னுடைய தாத்தா முத்துவேலர்‌ பாட்டு எழுதுவதில்‌ மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும்‌ வல்லவர்‌. அதேபோலதான்‌, தலைவர்‌ கலைஞரும்‌ கவிதைகள்‌ மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார்‌. அவர்‌ பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும்‌ அவருக்கு நன்றாக தெரியும்‌. இசையை கேட்டவுடனே, அதில்‌ சரி எது, தவறு எது என்று சொல்லிவிடுவார்‌. அந்தளவுக்கு வல்லமை பெற்றிருந்தார்‌.


அடுத்து, விண்ணோடும்‌ முகிலோடும்‌ விளையாடும்‌ வெண்ணிலவே' உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா “தமிழிசைச்‌ சித்தர்‌” சிதம்பரம்‌ ஜெயராமன்‌‌. அந்த வகையில்‌ எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது.


இந்தியா முழுவதும்‌ புகழைப்‌ பெற்ற பாடகி சுசீலா!


பின்னணி பாடகி சுசீலாவைத் தெரியாதவர்கள் இருக்கவே இருக்க முடியாது. தமிழ்நாட்டில்‌ மட்டுமல்ல, இந்தியா முழுவதும்‌ அப்படிப்பட்ட புகழைப்‌ பெற்ற பாடகி அவர்‌.


இன்றைக்கு இசைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ சார்பில்‌, பத்மபூஷன்‌ பி.சுசீலா, பி.எம்‌. சுந்தரம்‌ என இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டரேட்‌ பட்டம்‌ கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறோம்‌. இதன்‌ மூலமாக, டாக்டர்‌ பட்டமும்‌ பெருமை அடைகின்றது.’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 


தாங்கிப் பிடித்த ஸ்டாலின்


முன்னதாக பட்டத்தைப் பெறுவதற்காக பி.சுசீலா எழுந்து நின்றார். வயது முதிர்வு காரணமாக அவரால் நேராக நிற்க முடியவில்லை. தடுமாறிய அவர், முதல்வரின் கைகளைப் பிடித்துக்கொள்ள முயன்றார்.


நிற்க முடியாமல், நாற்காலியிலேயே சாய்ந்தார். அவரின் கைகளை முதல்வர் ஸ்டாலின் தாங்கிப் பிடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.