ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி (10, +2) அளவிலான தேர்வு 2020: அனுமதிக்கான மின் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்தது.
இதுதொடர்பாக பணியாளர் தேர்வு ஆணையத்தின் (தெற்கு மண்டலம்) இணைச் செயலாளர் மற்றும் மண்டல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " மின் அனுமதி சான்றிதழை பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் தேர்வு தேதிக்கு நான்கு நாட்கள் முன்னர் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள விண்ணப்பங்களில் அளிக்கப்பட்டுள்ள செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் இந்தத் தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.
தெற்கு மண்டலத்தில் இந்தத் தேர்வு 12.4.2021, 15.4.2021, 16.4.2021, 19.4.2021 முதல் 26.4.2021 வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெறும். நாளொன்றுக்கு மூன்று கட்டங்களாக- காலை 9 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும்.
மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டைகளின் அசல் ஆகியவை இல்லாமல் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் மின் அனுமதி சான்றிதழை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுபற்றிய சந்தேகங்களுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தின் உதவி எண்களை (தொலைபேசி- 044 28251139, செல்பேசி- 9445195946) விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.