கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களைத் தனியார் பள்ளிகள் தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, வட்டாரக் கல்வி அலுவலர்களாகப் பணி நியமனம் பெற்ற  95 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பணி நியமன ஆணையை வழங்கினார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


சாதி அல்ல வகுப்பு குறித்தே...


''எமிஸ் மேலாண்மை தளத்தில் மாணவர்களின் சாதி எந்த இடத்திலும் கேட்கப்படவில்லை. மாணவர் எந்த வகுப்பை (Community) சார்ந்தவர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) என்பதைப் பதிவு செய்யும் வகையிலேயே மேப்பிங் செய்யப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களின் சாதி குறித்து கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அதை மாற்றி அமைத்துள்ளோம்.


இந்த சூழலில் எதற்காக சாதி கேட்கப்படுகிறது என்று செய்தி வெளியாகிறது என்று தெரியவில்லை. சுகாதாரத் துறை சார்பில் மாணவிகளின் உடல் நலன் சார்ந்து சில கேள்விகளுக்கு பதில்கள் வேண்டும் என்று கோரிக்கை எடுக்கப்படும்போது, அவை எந்த இடத்தில் கேட்கப்பட்டுள்ளது என்று கூற வாய்ப்பில்லை.


இத்தகைய கேள்விகள் கேட்கப்படும்போது முதலில் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் மாணவர்கள் அளவிலும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்துகிறோம். அதற்குப் பிறகே இத்தகைய கேள்விகள் கேட்கப்படலாமா என்பது முடிவு செய்யப்படும். இந்த நிலையில் திட்டமிடும் சூழலிலேயே இத்தகைய செய்திகள் எவ்வாறு வெளியாகின்றன என்பது தெரியவில்லை. மாணவர்களின் நலன் குறித்த தகவல்களில் எது தேவையோ அது மட்டுமே கேட்கப்படும்.


முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் 


முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். நான் இந்த சாதியைச் சார்ந்தவன், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறேன் என்று மாணவர்கள் வெளிப்படையாகக் கூறினால்தான் மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகையைப் பெற முடியும். இது சமூக - பொருளாதாரம் சார்ந்த ஒன்று. ஆனால் அதையும் தாண்டி மாணவருக்குத் தன் சாதி குறித்துச் சொல்ல விருப்பம் இல்லாத சூழலில் கட்டாயப் படுத்துவது தவறு.


எந்த ஒரு கேள்வியும் நேரடியாக, அந்த குழந்தையைத் தூண்டும் விதத்தில் இருக்காது, சுற்றி வளைத்து எப்படிக் கேட்கப்பட வேண்டுமோ, அப்படித்தான் கேட்கப்படும். அதையும் தாண்டிய கேள்விகள் தவிர்க்கப்படும். 


சில அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்பு இல்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.


தனியார் பள்ளிகளுக்குக் கண்டிப்பு


மாணவர்களின் பெற்றோர் கல்வி கட்டணத்தைச செலுத்தவில்லை என்பதற்காக ஆன்லைன் வகுப்பில் ஜூம் இணைப்பைத் துண்டித்தது ஆகட்டும் வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைப்பதாகட்டும், இரண்டுமே தவறு. தனியார் பள்ளிகள் இதைச் செய்யக்கூடாது என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.''


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.