அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிமேல் முன்னதாகவே அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு உள்ளது.


நடந்தது என்ன?


கோவை மாநகராட்சி அலுவலகம், கல்வி அலுவலர் சார்பில், அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.


அதில், ’’அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ( பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) விடுப்புக் கோருதலுக்கான " CCMC ALL SCHOOLS TEACHERS வாட்ஸ் ஆப் " ( Whatsapp ) குழுவில் சிறு விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு ) ஆகியவற்றை முன்னதாக தெரிவிக்க வேண்டும்.


ஆசிரியர்களே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே


ஆணையர் அவர்களால் விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் , இதர விடுப்புகள் ( மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு ) ஆணையர் அவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் ( Whatsapp ) குழுவில் தமது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ( பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர ) இணைக்கப்பட்டுள்ளதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

இந்த சுற்றறிக்கையினை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுற்றுக்கு விட்டு கோப்பில் பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டிருந்தது.


சர்ச்சைகளை ஏற்படுத்திய சுற்றறிக்கை


இது ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.


இதுகுறித்து மீண்டும் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ’’மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட அலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.