எல்‌.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு சிறப்பாசிரிய்களுக்கான ஊதியத்தை மிகக்‌ குறைவாக நிர்ணயம்‌ செய்துள்ள தி.மு.க. அரசிற்கு கண்டனம்‌ தெரிவித்தும்‌ அதனை உயர்த்தித்‌ தர வலியுறுத்தியும் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 


இதுகுறித்துத் தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஓ. பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள‌ அறிக்கை:


''மாதா”, “பிதா”, “குரு”, “தெய்வம்‌” என்று பெற்றோருக்கு அடுத்த உயர்ந்த இடத்தில்‌ இருப்பவர்கள்‌ ஆசிரியர்கள்‌. எல்லோர்‌ வாழ்விலும்‌ முக்கியமான இடத்தைப்‌ பிடித்துள்ளவர்கள்‌ ஆசிரியர்கள்‌. “சுடர்‌ விளக்காயினும்‌ தூண்டுகோல் வேண்டும்‌” என்ற பழமொழிக்கேற்ப, எல்லா மாணவர்களுக்கும்‌ தூண்டுகோலாக, வழிகாட்டியாக, உந்து சக்தியாக, அவர்களை வெற்றிப்‌ பாதையில்‌ அழைத்துச்‌ செல்பவர்களாக விளங்குபவர்கள்‌ ஆசிரியர்கள்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது.


’இறைவனுக்கு சமமானவர்கள்‌’


மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்லாமல்‌, நல்லொழுக்கத்தையும்‌, நற்பண்புகளையும்‌, சமூகத்தை எதிர்கொள்வதற்கான துணிச்சலையும்‌ பயிற்றுவிப்பவர்கள்‌ ஆசிரியர்கள்‌. “எழுத்தறிவித்தவன்‌ இறைவனாவான்‌” என்பதற்கேற்ப ஆசிரியர்கள்‌ இறைவனுக்கு சமமானவர்கள்‌. இப்படிப்பட்ட இன்றியமையாத்‌ தன்மை வாய்ந்த ஆசிரியர்களை குறைத்து மதிப்பீடு செய்யும்‌ வகையில்‌ தி.மு.க. அரசு ஓர்‌ அரசாணையை வெளியிட்டு இருப்பது கடும்‌ கண்டனத்திற்குரியது.


அண்மையில்‌, 2,381 எல்‌.கே.ஜி மற்றும்‌ யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக்‌ கொள்ள அனுமதி அளித்தும்‌, அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை ஓர்‌ அரசாணையை  வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில்‌, மேற்படி சிறப்பாசிரியாகளுக்கான மாதச்‌ சம்பளம்‌ 5,000 ரூபாய்‌ என்றும்‌, 'இல்லம்‌ தேடி கல்வி திட்டத்தில்‌ பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌ என்றும்‌, அவர்களுக்கு போதுமான கல்வித்‌ தகுதி இல்லையென்றால்‌ தொடக்கக்‌ கல்வியில்‌ பட்டயம்‌ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌ என்றும்‌, அவர்களுடைய பணிக்காலம்‌ 11 மாதங்கள்‌ மட்டுமே என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓர்‌ ஆசிரியருக்கு மாத ஊதியம்‌ 5,000 ரூபாய்‌ என்றால்‌, ஒரு நாள்‌ சம்பளம்‌ என்பது வெறும்‌ 166 ரூபாய்தான்‌. குறைந்தபட்ச கூலிச்‌ சட்டத்தின்படி திறன்மிகு பணியாளர்களுக்கும்‌, திறன்பெறாத பணியாளர்களுக்கும்‌ அரசால்‌ ஊதியம்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதில்‌, அனைத்துத்‌ தரப்பு பணியாளர்களுக்கும்‌ ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கு மேல்தான்‌ ஊதியம்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டு இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்கீழ்‌ பணிபுரிபவர்களுக்கு ஒரு நாளைக்கு 281 ரூபாய்‌ ஊதியம்‌ வழங்கப்படுகின்றது. ஆனால்‌, சிறப்பாசிரியர்களுக்கு ஒரு நாள்‌ சம்பளம்‌ 166 ரூபாய்‌ என்பது இயற்கை நியதிக்கு முரணானது என்பதோடு மட்டுமல்லாமல்‌ சட்டத்திற்கும்‌ எதிரானதாக உள்ளது. 


’தனியார்‌ பள்ளிகளில்‌ கூட கூடுதல் ஊதியம்’


தனியார்‌ பள்ளிகளில்‌ கூட இதைவிட அதிக அளவு ஊதியம்‌ கொடுப்பதாக ஆசிரியர்கள்‌ தரப்பில்‌ கூறப்படுகிறது. தனியார்‌ பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அரசே தனியார்‌ நிறுவனம்‌ போல்‌ செயல்படுவது வருந்தத்தக்கது. இந்த 5,000 ரூபாய்‌ என்பது அவர்களுக்கான வழிச்‌ செலவிற்கே போதுமானதாக இருக்காது. குறைந்தபட்ச ஊதியத்தைக்‌ கூட அரசு தரவில்லையென்றால்‌, ஆசிரியர்களின்‌ வாழ்வாதாரம்‌ வெகுவாக
பாதிக்கப்படும்‌.




இது மட்டுமல்லாமல்‌, ஆசிரியார்களது பணிக்காலம்‌ 11 மாதங்கள்‌ மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிபந்தனை, இந்தப்‌ பணியில்‌ சேருவதற்கான ஆர்வத்தை குறைக்கும்‌ வகையில்‌ உள்ளது. மேலும்‌, கால அளவு நிர்ணயம்‌ செய்யப்பட்டிருப்பதைப்‌ பாரத்தால்‌, இந்தப்‌ வகுப்புகளை நிரந்தரமாக நடத்த அரசுக்கு ஆர்வம்‌ இல்லையோ என்ற சந்தேகமும்‌ பொதுமக்கள்‌ மத்தியில்‌ நிலவுகிறது. மழலையர்‌ வகுப்புகளை நடத்த வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தின்‌ பேரில்‌, விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே என்ற அச்சத்தில்‌ இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எடுப்பது எவ்வித பயனையும்‌ அளிக்காது.


எல்‌.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்‌ என்பது குழந்தைகளுக்கான அடித்தளம்‌ ஆகும்‌. அடித்தளம்‌ வலுவாக இருக்க வேண்டுமானால்‌, அதற்கேற்ற கட்டமைப்புகளை உருவாக்கும்‌ வகையிலும்‌, ஆசிரியாகளை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌ அரசின்‌ செயல்பாடு அமைய வேண்டும்‌. ஆனால்‌, அரசின்‌ செயல்பாடோ வேறுவிதமாக இருக்கிறது. தி.மு.க. அரசின்‌ தற்போதைய நடவடிக்கை முறைசார்ந்த கல்வியை நீர்த்துப்‌ போகச்‌ செய்யும்‌ நடவடிக்கையாகும்‌.


’நகைப்புக்குரியது’


முதலில்‌ மழலையர்‌ வகுப்புகளை நிறுத்த முடிவெடுத்த தி.மு.க. அரசு, அரசியல்‌ கட்சிகள்‌ பற்றும்‌ சமூக ஆர்வலர்கள்‌ எதிர்ப்பு தெரிவித்ததன்‌ காரணமாக அதனை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில்‌, குறைந்தபட்ச ஊதியத்தை கூட வழங்காமல்‌, 11 மாதங்கள்‌ என கால அளவை நிர்ணயம்‌ செய்து ஆசிரியர்களை நியமனம்‌ செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தகுதியான ஆசிரியர்களை நியாயமான ஊதியத்தில்‌ அமர்த்த வேண்டியது அரசின்‌ கடமை.


இதில்‌ ஆசிரியர்களின்‌ நலன்‌ மட்டுமல்லாமல்‌ குழந்தைகளின்‌ எதிர்காலமும்‌ அடங்கியுள்ளது என்பதை அரசு உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தால்‌ அது அனைவருக்கும்‌ நலம்‌ பயப்பதாக அமையும்‌. இதுகுறித்து பலவேறு ஆசிரியர் சங்கங்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌ தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்‌. அதன்‌ அடிப்படையில்‌, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.


எனவே, முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, எல்‌.கே.ஜி மற்றும்‌ யு.கே.ஜி. வகுப்பு ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைந்தபட்சம்‌ 10,000 ரூபாயாக உயர்த்தவும்‌, 11 மாதம்‌ என்ற கால அளவை ரத்து செய்யவும்‌, மேற்படி வகுப்புகளுக்கு நிரந்தரமாக, இட ஒதுக்கீட்டின்‌ அடிப்படையில்‌ ஆசிரியர்களை நியமிக்கவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌
வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌''.


இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.