''5 ஆண்டும் இருண்ட காலம்; தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியை கூட திறக்காத திமுக அரசு''- சாடும் அன்புமணி!

புதிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காததன் மூலம் மத்திய அரசின் விதியை எதிர்ப்பதற்கு கூட இடம் கொடுக்காமல் தமிழக அரசு சரணடைந்து விட்டது.

Continues below advertisement

கடைசி வாய்ப்பையும் திமுக அரசு தவற விட்டதாகவும் தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியை கூட திறக்கவில்லை எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் சாடியுள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘’2025- 26ஆம் ஆண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்காக தமிழக அரசின் சார்பில் எந்த விண்ணப்பமும் செய்யப்படவில்லை. தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கை நடப்பாண்டில் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், புதிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காததன் மூலம், சட்டப்போராட்டம் நடத்தியாவது புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கான கடைசி வாய்ப்பையும் தமிழக அரசு இழந்து விட்டது.

இந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான விண்ணப்பங்களை கடந்த டிசம்பர் 19-ஆம் நாள் முதல் ஜனவரி 18-ஆம் நாள் வரை ஆன்லைன் முறையில் தேசிய மருத்துவ ஆணையம் பெற்றது. ஆனால், இந்த காலகட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தவோ தமிழக அரசு விண்ணப்பம் செய்யவில்லை.

தமிழக அரசு சரண்

தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள புதிய விதிகள் 2025-26ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதால், தமிழக அரசு விண்ணப்பித்திருந்தாலும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கோ, கூடுதல் இடங்களுக்கோ அனுமதி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனாலும், தமிழக அரசின் சார்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளைக் காட்டி அவை நிராகரிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும், தமிழகத்தின் மருத்துவக்கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறவும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், புதிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காததன் மூலம் மத்திய அரசின் விதியை எதிர்ப்பதற்கு கூட இடம் கொடுக்காமல் தமிழக அரசு சரணடைந்து விட்டது.

10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்; 150 மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் கூடுதலாக உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள் அனுமதிக்கப்படாது என்ற புதிய விதிமுறையை கடந்த 2023 ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள்தொகைக்கு தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளை தேசிய மருத்துவ ஆணையம் அனுமதிக்காது என்ற நிலை உருவானது. அதற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து நான்தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன். அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டு மட்டும் தளர்த்தப்பட்டன.

ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு துரோகம்

அதன்படி 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காமல் கோட்டை விட்ட தமிழக அரசு, இந்த ஆண்டும் அதே தவறை செய்திருக்கிறது. கடந்த 2021ஆம்  ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 550 கூடுதல் இடங்களை ஏற்படுத்த கடந்த அக்டோபர் மாதம் அரசு விண்ணப்பித்தது. ஆனால், முறைப்படி விண்ணப்பிக்கும் காலத்தில் விண்ணப்பம் செய்யாததாலும், அந்தக் கல்லூரிகளில் ஏற்கனவே 150 இடங்கள் இருப்பதாலும் கூடுதல் இடங்களுக்கு அனுமதி கிடைக்காது. இதன் மூலம் மருத்துவக் கல்வி வளர்ச்சிக்கும், ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுக்கும் திராவிட மாடல் அரசு துரோகம் செய்துவிட்டது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2021 தேர்தலுக்கான  தேர்தல் அறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இனி புதிய மருத்துவக் கல்லூரிகளே இல்லை

மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டம் ஏற்கனவே முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தமிழக அரசு அதன் சொந்த நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க வேண்டும். ஆனால், யாருக்கும் பயனற்ற, விளம்பரத் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடி நிதியை வீணாக செலவழித்த திமுக அரசு, மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் மட்டும் மத்திய அரசின் நிதியைக் கோரியிருக்கிறோம் என்ற பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடி மக்களை ஏமாற்றி வந்தது. அதன் மூலம் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது.

தேசிய மருத்துவ ஆணையம் 2023-ஆம் ஆண்டில் பிறப்பித்த புதிய ஆணையின்படி, தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது, சட்டப் போராட்டம், அரசியல் போராட்டம் நடத்தி அதை முறியடிப்போம் என்ற திராவிட மாடல் அரசு வீர வசனங்களை பேசியது. அவை வசனங்களாகவே காலாவதியாகிவிட்ட நிலையில், எந்தப் பயனும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் 1984-ஆம் ஆண்டு வரை வெறும் 8 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான் தொடங்கப் பட்டிருந்தன. அதற்குப் பிந்தைய 35 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைந்த ஒவ்வொரு அரசும் குறைந்தது ஓர் அரசு மருத்துவக் கல்லூரியையாவது அமைத்துள்ளன. ஆனால், ஐந்தாண்டு ஆட்சி நடத்தியும் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்காத ஒரே அரசு என்ற அவப்பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெற்றிருக்கிறது. மருத்துவக் கல்வி வரலாற்றில் இந்த ஐந்தாண்டுகள் இருண்ட காலமாகவே பதிவு செய்யப்படும். இதற்கு காரணமானவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola