அரசுப்பள்ளி வளாகங்களில் செயல்படும் மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கப் பள்ளி இயக்குநர், தனியார் பள்ளி இயக்குநர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறு
பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அது பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்களை உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்து, அதற்கு பொதுப்பணித் துறையால் நிர்ணயம் செய்யப்படும் வாடகையினை நிர்ணயம் செய்து கொள்ளவும் அதற்கான கருத்துருவினை 30.04.2024க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
மேலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளிக் கட்டிடங்களில் செயல்படவில்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்தல் வேண்டும். இல்லையெனில் மேற்காணும் பணியினை செயலாக்கம் செய்யப்படவில்லை என்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் இயங்கி வரும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களை பொதுப் பணித்துறை நிர்ணயிக்கும் வாடகையின் அடிப்படையில் உடனடியாக இடம் மாற்றம் செய்து விட்டு அதன் அறிக்கையினை 10.04.2024 தேதிக்குள் இந்த இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல வரும் கல்வி ஆண்டில், பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் எந்த ஒரு முதன்மைக் கல்வி அலுவலகங்கள் , மாவட்டக் கல்வி அலுவலகங்களும் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: TNSET 2024: மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி என்ன? முக்கியத் தகவல்கள்!