சேலத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் சேர்ந்த 75 மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களிடம் தான் கடுமையான உழைப்பும், விடா முயற்சியும் உள்ளது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.



அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் சேர்ந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 75 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதனிடையே சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, பள்ளி முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும்போது எந்தவித தாழ்வு மனப்பான்மை உணர்வும் இடம்பெற கூடாது. தேர்ந்தெடுத்த துறையில் எந்தவித சிதறல், இடர்பாடுகள் இல்லாமல் படித்து முடிக்க வேண்டும்.


அதற்கு மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் முழு ஒத்துழைப்பாக இருக்கும் என்றார். தமிழ்வழிக் கல்வி படித்தோம் என்ற தாழ்வு மனப்பான்மை மாணவர்களுக்கு இருந்துவிடக் கூடாது தாய் மொழியில் படித்ததை முழு பலமாக வைத்து கொள்ள வேண்டும் மற்றும் மக்களை நேசிக்கக் கூடிய மனநிலை மருத்துவராக மாறக்கூடிய மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். மாணவர்கள் படித்து முடித்து விட்டு மருத்துவரான பின்பு சொந்த மாவட்டங்களில் அடித்தட்டு மக்களுக்கு சேவைபுரிய பணியாற்ற வேண்டும், மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மனத் தளர்வு இல்லாமல் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் மற்றும் கிராமப்புற மாணவர்களிடம்  கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் உள்ளது. 


சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெயர் சேர்க்கப்படாத 18 பேர் பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. செய்தி வெளியிட்ட ஒரு சில மணி நேரத்தில் பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 18 மாணவ, மாணவியரின் பெயர்கள் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றனர். பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்த மாணவர்கள் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலாம் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.