40 சதவீதம் வரை மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு, மருத்துவ சேர்க்கையை மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறன் மதிப்பீட்டு வாரியம் சம்பந்தப்பட்ட நபருக்கு எம்பிபிஎஸ் படிப்பைப் படிக்கத் தகுதியில்லை என்று அறிக்கை தந்தால் ஒழிய, மருத்துவக் கல்வியை மறுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


40 முதல் 45 சதவீத பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு கொண்ட மனுதாரர் எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அரவிந்த் குமார் கே.வி.  விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.






கடந்த செப்.18ஆம் தேதி உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மனுதாரர் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் அமைத்த மருத்துவக் குழு அறிக்கைப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்த விரிவான உத்தரவை இன்று நீதிமன்றம் வழங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கு 44 சதவீத மொழி, பேச்சுக் குறைபாடு இருந்த நிலையில், மருத்துவ இடம் கிடையாது என்று கூறப்பட்டு இருந்தது. 


எனினும் மருத்துவ இடத்தை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் குழு அறிக்கைப்படியே மருத்துவ இடம் ஒதுக்கப்படும் எனவும் 40 சதவீதம் வரை மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு, மருத்துவ சேர்க்கையை மறுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.