சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில 14.11.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

சென்னை, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 2025- 2026 கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

என்னென்ன பயிற்சிகள்?

அதன்படி, சென்னை, ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் கார்டியோசோனோகிராஃபி டெக்னீஷியன் (1 ஆண்டு) (பெண்), ஈ.சி.ஜி / ட்ரெட்மில் டெக்னீஷியன் (1 ஆண்டு), பம்ப் டெக்னீஷியன் (1 ஆண்டு), கார்டியக்கத்திடெரைசேஷன் லாப் டெக்னீஷியன் (1 ஆண்டு) (ஆண்), அவசரசிகிச்சை டெக்னீஷியன் (1 ஆண்டு), சுவாசசிகிச்சை டெக்னீஷியன் (1 ஆண்டு), டயாலிசிஸ் டெக்னீஷியன் (1 ஆண்டு), மயக்கமருந்து டெக்னீஷியன் (1 ஆண்டு). தியேட்டர் டெக்னீஷியன் (1 ஆண்டு), ஈ.இ.ஜி / ஈ.எம்.ஜி டெக்னீஷியன் (1 ஆண்டு), மூடநீக்கியல் டெக்னீஷியன் (1 ஆண்டு) (ஆண்), பன்முக மருத்துவமனைப்பணியாளர் போன்ற சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Continues below advertisement

வயது வரம்பு

மேற்கண்ட பாடப் பிரிவுகளில் பயில, விண்ணப்பதாரர் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு / மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.

என்னென்ன தகுதி?

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப் பிரிவுகளில் பயின்று இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் அதிகபட்சமாக 100 மதிப்பெண் வரை கணக்கிடப்படுகிறது. பன்முக மருத்துவமனை பணியாளர் படிப்பிற்கு பத்தாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் அதிகபட்சமாக 100 மதிப்பெண் வரை கணக்கிடப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் மருத்துவ பிரிவு- 3ல் கட்டணமின்றி வழங்கப்படும். உரிய முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 14.11.2025-க்குள் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட பாடப்பிரிவிகளில் பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை முறை நடைபெற்று வருகிறது. முழு மாணவர் சேர்க்கை செயல்முறையும் 14.11.2025 அன்று நிறைவுபெறும். இதற்கான கலந்தாய்வு சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெறும்.

என்ன ஆவணங்கள் தேவை?

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுசான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் (பொருந்துமாயின்), சாதிச்சான்றிதழ், வயதுச்சான்று (பிறப்புச் சான்றிதழ் / பள்ளிச் சான்றிதழ்), மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதார்அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://www.stanleymedicalcollege.in/ என்ற இணைய தள முகவரியிலோ, 9840505701 என்ற உதவி எண்ணிலோ, stanleycollege19@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

எனவே, மேற்கண்ட மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஆர்வம் உள்ள தகுதியான மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.