5 லட்சம் பேர் பயணம்!
தீபாவளியை ஒட்டி இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகளில் அக்.16ல் இருந்து அக்.17 நள்ளிரவு வரை 3.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். மேலும் 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,975 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று பேருந்து, ரயில், விமானம் மூலமாகவும், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை.
எடப்பாடியின் அல்வா - சேகர் பாபு
“எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அதிமுக பல கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது. அவர் கொடுத்த அல்வாவால் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவும் உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார்” - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
”மேலும் வலுவடையும்”
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என கணிப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
அமலாக்கத்துறை நேரில் ஆஜராக நோட்டீஸ்!
திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ். ஆகாஷிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், அதனை மீறி ED நோட்டீஸ் அனுப்பியதாக வழக்கு
மோடி உடன் சந்திப்பு
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு. இருநாட்டு உறவு, தமிழ்நாட்டு மீனவர்கள் நலன், கல்வி உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக தகவல்.
கேரளாவில் வெள்ளப்பெருக்கு
கேரளாவின் இடுக்கியில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அதிர்ச்சி. வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இட ஒதுக்கீடு கோரி பந்த்
தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் பந்த் அறிவிப்பு. இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்ட நிலையில், அக். 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
அஜித் அகர்கர் விளக்கம்
“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் மற்றும் ரோஹித் ரன் குவிக்காமல் போனால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என பரவும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. 2027ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்ய இன்னும் நீண்ட காலம் உள்ளது. ஷமி உடற்தகுதியுடன் இல்லாததால் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யவில்லை” - தேர்வுக் குழு தலைவர் விளக்கம்
ஆஃப்கானிஸ்தான் விலகல்:
பாகிஸ்தானுடன் எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில், முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகல். வரும் நவ.17ம் தேதி தொடங்கும் இத்தொடரில், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆஃப்கானிஸ்தானின் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.