2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்‌ பட்டயப்‌ பயிற்சிக்கான விண்ணப்பத்‌ தேதியை நீட்டித்து தர வேண்டும் என்று ஓபிஎஸ் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுகுறித்துத் தமிழக முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள‌ அறிக்கை:


’’தமிழ்நாடு மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தால்‌ ஆண்டுதோறும்‌ தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்‌ கல்வி பட்டயப்‌ பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்த மாணவ, மாணவியர்‌ இந்தப்‌ பயிற்சியில்‌ சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளம்‌ வழியாக 04-07-2022 காலை 10-00 மணி முதல்‌ 09-07-2022 மாலை 5-00 மணி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு கால அவகாசம்‌ வழங்கப்பட்டது. 


இந்தப்‌ பயிற்சியில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்‌ தங்கள்‌ இருப்பிடத்திற்கு அருகில்‌ உள்ள ஏதேனும்‌ ஒரு மாவட்ட ஆசிரியர்‌ பள்ளி மற்றும்‌ பயிற்சி நிறுவனங்களின்‌ உதவியுடன்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்தப்‌ பயிற்சியில்‌ சேர ஏராளமான கிராமப்புற மாணவ, மாணவியர்‌ ஆர்வத்துடன்‌ இணையதளம்‌ வழியாக விண்ணப்பித்தனர்‌. 




இருப்பினும்‌ மேற்குறிப்பிட்ட காலத்திற்குள்‌ பெரும்பாலான மாணவ, மாணவியர்‌ விண்ணப்பிக்காத சூழ்நிலையில்‌, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 13-07-2022 வரை மேலும்‌ நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பிற்குப்‌ பிறகும்‌, பெரும்பாலான இடங்களில்‌, குறிப்பாக கிராமப் புறங்களில்‌ குறிப்பிட்ட காலத்திற்குள்‌ விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டதாகவும்‌, இதற்குக்‌ காரணம்‌, இணைய இணைப்பு அதாவது Network Connection சரியாக இல்லாததுதான்‌ என்றும்‌, மேலும்‌ ஒரு வார காலம்‌ அவகாசம்‌ அளிக்கும்பட்சத்தில்‌ அனைத்து மாணவ, மாணவியரும்‌ விண்ணப்பிக்க ஏதுவாக இருக்குமென்றும்‌ இந்தப்‌ பயிற்சியை ஆர்வமுடன்‌ பயில உள்ள மாணவ, மாணவியரும்‌, அவர்களது பெற்றோர்களும்‌ என்னிடம்‌ கோரிக்கை வைத்துள்ளனர்‌. 


இவர்களுடைய கோரிக்கையில்‌ நியாயம்‌ இருப்பதாக நான்‌ கருதுகிறேன்‌. இந்த நியாயமான கோரிக்கையினைப் பரிசீலிக்க வேண்டிய கடமை தமிழக அரசாங்கத்திற்கு உள்ளது.


எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மேற்படி‌ கோரிக்கையில்‌ உள்ள நியாயத்தைக்‌ கருத்தில்‌ கொண்டு, ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர்‌ தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்‌ பட்டயப்‌ பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம்‌ அவகாசம்‌ அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வற்புறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.


இவ்வாறு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண