நாடாளுமன்றத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு, தமிழ்நாட்டில் எதிர்வினைகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவு:
’’உடையாததை ஒட்ட வைக்கப் பார்க்காதீர்கள்; தமிழ்நாட்டு கல்வி முறை அளிப்பதை தேசிய கல்விக் கொள்கை தடுக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்று மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விமர்சிப்பது, தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல் உண்மையை முற்றிலுமாக புறக்கணிக்கிறது.
இது தமிழ் மொழியைப் பற்றியது மட்டுமல்ல, பரிசோதிக்கப்பட்டு, பல்லாண்டுகளாக வெற்றிகரமாக உள்ள கல்வி முறையைப் பற்றியது.
தமிழ்நாடு மாடல்
எங்களின் மாநிலக் கல்வி வாரியம், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பான முடிவுகளைத் தொடர்ந்து அளித்து வருகிறது. இந்தியா முழுக்கவும் வெளிநாடுகளிலும் எங்களின் மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக ஜொலித்து வருகிறார்கள்.
எந்தெந்தப் பள்ளிகளில் எவ்வளவு பேர்?
தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரிய பள்ளிகள் 58,779-ல் சுமார் 1.09 கோடி மணவர்கள் படித்து வரும் நிலையில், 1635 சிபிஎஸ்இ பள்ளிகளில் வெறும் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள்.
இதனால் தமிழக மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. சிலர் கூறுவதுபோல் மூன்றாம் மொழியைக் கற்க வேண்டும் என்ற கோரிக்கை உண்மையான இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் மாநில வாரியப் பள்ளிகளைத் தொடர்ந்து தேர்வு செய்கிறார்கள்? மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்போம்.
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் ஒரு பகுதியாக ஆங்கிலம் ஏற்கனவே உள்ளது. அது, மாணவர்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தைப் பேணுகையில் உலகளாவிய வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
வெறும் மொழி மட்டும் கிடையாது
தமிழ் என்பது வெறும் மொழி மட்டும் கிடையாது. அது நமது வேர்கள், வரலாறு மற்றும் விழுமியங்களுடன் தொடர்புடையது.
மூன்றாவது மொழியை திணிப்பதைப் போலன்றி, இந்த முறை மாணவர்கள் உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்திலும், கலாச்சார நெறிமுறைகளுக்காக தமிழிலும் தேர்ச்சி பெற அனுமதிக்கிறது. ஆங்கில வழிப் பள்ளிகளில் கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். நமது பெருமைக்கு தமிழ், உலக வழிகாட்டியாக ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே நமது முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான பாதை.
கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை
நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.
மத்தியக் கல்வி அமைச்சரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், ஏன் மாற்றத்தை கட்டாயப்படுத்த வேண்டும்?
அனைவருக்கும் பொருந்தக்கூடிய, தேசிய கல்விக் கொள்கையைவிட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்?
தமிழ்நாடு, தனது மாணவர்களுக்கு எது தேவை? எது சிறந்தது? என்பதில் சமரசம் செய்யாது. தயவுசெய்து எங்களின் கல்வி அமைப்பை சீர்குலைக்காதீர்கள்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.