பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிப்பதா சமூகநீதி என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், உடனே ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 400-க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, அந்தப் பள்ளிகளில் ஏற்கனவே தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 300 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறது. தொலைநோக்குப் பார்வையில்லாத நடவடிக்கைகளின் மூலம் பழங்குடியின மாணவர்களின் கல்வி வாய்ப்பை அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அங்கமாக இருந்த பழங்குடியினர் நலத் துறை 2000ஆம் ஆண்டில் தனித்துறையாக பிரிக்கப்பட்டது. ஆனாலும், கூட்டு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த பழங்குடியினர் நலத்துறை, 01.04.2018ஆம் நாள் முதல்தான் தனித்த அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 தொடக்கப் பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 31 உயர்நிலைப் பள்ளிகள், 28 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 320 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

இந்தப் பள்ளிகளில் ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பள்ளிகளில் 210 இடைநிலை ஆசிரியர்கள், 179 பட்டதாரி ஆசிரியர்கள், 49 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. அதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 300 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டதுதான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


திடீரெனப் பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள்

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றி வந்த 300 தற்காலிக ஆசிரியர்களும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்றி பள்ளிகளின் கல்வித்தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரித்து வந்தனர். இத்தகைய சூழலில் அவர்கள் திடீரென பணி நீக்கப்பட்டதற்காக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது.


தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, அவர்கள் பிற வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறித்தான் ஏற்கனவே இருந்த தற்காலிக ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஒருவேளை தகுதி பெற்ற ஆசிரியர்களைத்தான் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும் கூட, அதற்காக பின்பற்றப்பட்ட அணுகுமுறை தவறு.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முன்பாக நிரந்தர ஆசிரியர்களையோ, மாற்று தற்காலிக ஆசிரியர்களையோ நியமிக்க பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், புதிய ஆசிரியர்களையும் நியமிக்க முடியவில்லை. அதனால், பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பிற பள்ளிகளைப் போல நகரத்துக்கு மத்தியில் அமைந்திருப்பதில்லை. எளிதில் அணுகமுடியாத தொலைதூரப் பகுதிகளில்தான் அவை அமைந்துள்ளன. தற்காலிக ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தரப்படுவதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற எவரும் தொலைதூரங்களில் உள்ள பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றத் தயாராக இல்லை. அதனால், பழங்குடியின பள்ளிகளின் மாணவர்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலைக்கு காரணமான பழங்குடியினர் நலத்துறை இயக்குனர், தமது தவறைத் திருத்திக் கொள்வதற்கு பதிலாக, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார். ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததையும், தற்காலிக ஆசிரியர்கள் நீக்கப்பட்டதையும் ஊடக நேர்காணல் மூலம் சுட்டிக்காட்டியதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.


இதுவா திமுக அரசின் சமூகநீதி?

சமூகப் படிநிலையின் அடித்தட்டில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை விட மோசமான சமூக அநீதி எதுவும் கிடையாது. 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காத அரசு, அதை சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு குறிப்பாணை வழங்கி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதுவா திமுக அரசின் சமூகநீதி?

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் 300 பேரும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணையை அரசு திரும்பப் பெற வேண்டும்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.