வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற 41-வது பட்டமளிப்பு விழாவில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இவ்விழாவின்போது, பட்டம் பெறும் மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய ரேகா குப்தா
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய டெல்லி முதல்வர், அரசும் பட்டதாரிகளும் இணைந்து செயல்படும்போது, சமூகத்தின் பல அழுத்தமான பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று கூறினார். டெல்லியின் சொந்த அனுபவத்தை மேற்கோள் காட்டி, ஐஐடி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற சவால்களுக்கு அந்நகரம் தீர்வு கண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். பட்டம் பெறும் மாணவர்கள் பணியில் சேர்ந்தவுடன், தங்கள் நகரங்களுக்கான தீர்வுகளுக்கும், தேசத்திற்கான புத்தாக்கத்திற்கும் பங்களிக்கும் வகையில், இதே போன்ற பாத்திரங்களை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“இந்தியாவின் சொந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்குங்கள்“
தொடர்ந்து, "செயற்கை நுண்ணறிவை வெறும் பயனாளர்களாக மட்டும் இருக்காதீர்கள், இந்தியாவின் சொந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்குங்கள்," என்று கூறிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம்' மூலம் குறைக்கடத்திகள், கணினி உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, விண்வெளி, ட்ரோன்கள், ரோபோடிக்ஸ் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செய்துள்ள கணிசமான முதலீடுகளை சுட்டிக்காட்டினார். இந்தியா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலையிலிருந்து அதை உருவாக்கும் நிலைக்கு மாறுவதே இதன் நோக்கம் என்றும், இந்த மாற்றத்தை பட்டதாரிகள் தங்கள் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றக்கூடிய மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் இலக்குகள் "மேக் இன் இந்தியா," "இன்வெஸ்ட் இன் இந்தியா," "டிசைன் இன் இந்தியா" மற்றும் "பிராண்ட் இன் இந்தியா" ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்திய பொறியாளர்களின் திறமையை உலகம் அங்கீகரித்துள்ள நிலையில், அது இப்போது இந்தியத் தொழில்நுட்பத்தின் வலிமையையும் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு வேந்தர் ஜி. விஸ்வநாதன் விடுத்த வேண்டுகோள்
முன்னதாக நிகச்சியில் உரையாற்றிய விஐடி வேந்தர் ஜி. விஸ்வநாதன், துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான உரசல்களைச் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்களிலும், கேரளாவில் 13-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும் தற்போது காலிப் பணியிடங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதை கருத்தில் கொண்டு, கல்வித் துறையும் மாணவர்களின் நலன்களும் பாதிக்கப்படாத வகையில், ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த உதவுமாறு, புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, 11,276 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். மேலும், 781 மாணவர்கள் பிஎச்.டி பட்டங்களையும், மூன்று பேர் ஒருங்கிணைந்த பிஎச்.டி பட்டங்களையும் பெற்றனர். கல்விச் சிறப்புக்கான சான்றிதழ்கள் 248 உயர் தரவரிசை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன, அதே நேரத்தில் 84 பேர் தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். இந்த விழாவில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் மகன் நிகுஞ்ச் குப்தாவும் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
