ஹஜ் புனித பயணம் செல்லும் தமிழ்நாட்டு புனிதப் பயணிகளுக்குச் சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்,  தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை: புனித ஹஜ் பயணம் 2027-ஆம் ஆண்டிற்காக தமிழ்நாட்டிலிருந்து சவூதி அரேபியா செல்லவிருக்கும் புனிதப் பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் சேவைகளையும் மேற்கொள்வதற்காக, மாநில ஹஜ் ஆய்வாளர்களாக (State Haj Inspectors) பணியாற்றத் தகுதியான அலுவலர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அறிவிப்பின் விரிவான விவரங்கள் வருமாறு;

Continues below advertisement

இந்திய ஹஜ் குழுவின் சுற்றறிக்கை

மும்பையில் இயங்கி வரும் இந்திய ஹஜ் குழு தனது சுற்றறிக்கை எண்.7 (நாள்: 11.08.2026)-ன் படி, ஹஜ் 2027 புனிதப் பயணத்தின் போது தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் யாத்திரிகர்களுக்குச் சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களைத் தற்காலிகமாகச் சவூதி அரேபியாவிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது. இதற்காகத் தகுதியும் விருப்பமும் உள்ள பணியாளர்களிடமிருந்து இணையவழி (Online) மூலமாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பணிக்காலம் மற்றும் பணித்தன்மை

மாநில ஹஜ் ஆய்வாளர்களுக்கான தற்காலிகப் பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை சுமார் இரண்டு மாத கால அளவாகும். இக்காலகட்டத்தில் தேர்வாகும் அலுவலர்கள் சவூதி அரேபியாவில் தங்கியிருந்து தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளின் வசதிகள், தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவைப் பணிகளைக் கவனித்துக் கொள்வார்கள்.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்த இரண்டு மாத காலமும், அவர்கள் தற்போது பணியாற்றி வரும் துறையில் அவர்களின் வழக்கமான 'பணிக்காலமாகவே' (On Duty) கருதப்படும்.

விண்ணப்பிக்கத் தகுதிகள்

* மத்திய அரசு அல்லது மாநில அரசில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்.

* துணை இராணுவப் படைகளில் (Paramilitary Forces) பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள்.

* தன்னாட்சி அமைப்புகள் (Autonomous Bodies) அல்லது மத்திய-மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் (Permanent Employees) மட்டும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்கள்

இப்பணிக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, இதர விரிவான கல்வி மற்றும் பணி அனுபவத் தகுதிகள், தேர்வு மற்றும் நியமன முறைகள் ஆகியவை குறித்த முழுமையான வழிகாட்டுதல்களை மும்பை இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 

விருப்பமும் தகுதியும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் உரிய சான்றிதழ்களுடன் இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2026 ஆகும்.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்துச் சேவைப் பணியில் பங்கேற்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார். இப்பணி மற்றும் விண்ணப்ப படிவங்கள் தொடர்பான மேலும் கூடுதல் தகவல்களுக்கு இந்திய ஹஜ் குழு இணையதளத்தை www.hajcommittee.gov.in பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.