நாடு முழுவதும் 23 புதிய சைனிக் பள்ளிகள் பங்களிப்பு முறையில் செயல்பட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து இந்த பள்ளிகள் உருவாக்கப்படும்.
இது தொடர்பாக மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு 6ஆம் வகுப்பு முதல் வகுப்பு வாரியாக 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பள்ளிகள் தனியார் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து உருவாக்கப்படும். நாடு முழுவதும் இதுதொடர்பாக 19 புதிய சைனிக் பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சைனிக் பள்ளிகள் சங்கம் (Sainik Schools Society) கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் கூட்டாண்மை முறையில் செயல்படும் புதிய சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 33 சைனிக் பள்ளிகள் இவ்வாறு இயங்கி வந்தன.
இந்த புதிய சைனிக் பள்ளிகள், அங்கீகாரம் பெறும் அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைக்கப்படுவதுடன், சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும். புதிய பள்ளிகள், சங்கம் பரிந்துரைக்கும் விதிமுறைகளைப் பின்பற்றும்.
பின்னணி என்ன?
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், மாநில அரசுப் பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதில் 18 புதிய சைனிக் பள்ளிகளைத் தொடங்க சைனிக் பள்ளிகள் சங்கம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பின் கீழ் சைனிக் பள்ளி தொடங்கப்படுகிறது.
கூட்டு முறையில் புதிய சைனிக் பள்ளிகளைத் திறப்பதற்கான தகுதிகளைப் பொறுத்தவரை, சைனிக் சங்கத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், அங்கீகரிக்கப்பட்ட துணைச் சட்டங்களுக்கு இணங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமாக, 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கம் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவது இதன் நோக்கம் ஆகும். ஆயுதப் படைகளில் சேருவதும் இதில் அடங்கும்.
இன்றைய இளைஞர்களை நாளைய பொறுப்பான குடிமக்களாக மாற்றுவதன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்துடன் கைகோத்து செயல்பட தனியார் துறைக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வழக்கமான வாரிய பாடத்திட்டத்துடன், சைனிக் பள்ளி மாணவர்களுக்கு அகாடமிக் பிளஸ் பாடத்திட்டம் கற்பிக்கப்படும்.
இப்பள்ளிகளின் செயல்பாட்டு முறைகள் குறித்த விவரங்களை https://sainikschool.ncog.gov.in/apply-online#step-4
என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து காணலாம். ஆர்வமுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் இந்த இணையதளத்தைப் பார்த்து, புதிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
இவ்வாறு மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் https://sainikschool.ncog.gov.in/apply-online#step-6 என்ற இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://sainikschool.ncog.gov.in/