தமிழக அரசு ஊழியர்களுக்கு 1-7-2022 முதல் 38 விழுக்காடு அகவிலைப் படியினை வழங்கிட தமிழக முதலமைச்சரிடம் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கூறியுள்ளதாவது:
''மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியானது 1.7.2022 முதல் 34 விழுக்காட்டில் இருந்து 39 விழுக்காடாக 4 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அகவிலைப் படியை ஐூலை மாதத்திலிருந்து வழங்கவும் நிலுவைத் தொகையினை ரொக்கமாக வழங்கவும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தினைப் பொறுத்தவரையில், மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்பட்ட நாள் முதல், மாநில அரசும் ஊதியத்தினையும் அகவிலைப் படியினையும் மத்திய அரசு வழங்கிய அதே தேதியில் வழங்கும் நடைமுறையினைப் பின்பற்றி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அகவிலைப்படி வழங்குவதில் நிதி நிலைமையினைக் கருத்தில் கொண்டு, காலம் தாழ்த்தி வழங்கும் நிலை ஏற்பட்டது.
கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்த போதெல்லாம், மத்திய அரசு அறிவித்த உடனேயே அதே தேதியில் அகவிலைப் படியினை அறிவிக்கும் நடைமுறையினை மேற்கொண்டு வந்துள்ளார். அதிலும் குறிப்பாக, 2006-2011 காலத்தில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது, 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தனியார் மருத்துவமனையில் இருந்தபோது கூட, தொலைக்காட்சி வாயிலாக மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வினை அறிவித்த செய்தியினை பார்த்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் அதனை உடனடியாக வழங்கிட இரண்டே நாளில் கோப்பில் கையெழுத்திட்டார் என்பதனை இன்றளவும் நினைத்து, ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் பெருமிதப்பட்டுக் கொள்கிறோம்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் மீண்டதோடு மட்டுமல்லாமல், தற்போது தமிழகத்தின் நிதி நிலைமையும் சீரடைந்து வருகிறது. தமிழக முதலமைச்சரும் தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் 100 சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்பதனை பல்வேறு தருணங்களில் உறுதிபட தெரிவித்துக் கொண்டு வருகிறார்.
மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் அறிவிக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப் படியினை மாநில அரசும் தீபாவளிப் பண்டிகையின்போது மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கிடுவதை இதுநாள்வரை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், தற்போது விலைவாசி உயர்வு என்பது அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாக நிதிச் சுமைக்கு உள்ளாகி உள்ளது.
எனவே, கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட நடைமுறையின் அடிப்படையில், விலைவாசி உயர்விற்கு ஏற்றாற்போல் மத்திய அரசினால் உயர்த்தப்படும் அகவிலைப்படியினை, மத்திய அரசு வழங்கிய அதே தேதியில் மாநில அரசு ஊழியர்களுக்கும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட்ட 4 விழுக்காடு அகவிலைப் படியினைச் சேர்த்து 38 விழுக்காடாக வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சரைக் கேட்டுத் கொள்கிறோம்''.
இவ்வாறு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துள்ளது.