Certificate : புரட்டிப்போட்ட மிக்ஜம் புயல்: சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் இலவசமாக நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம்- விதிமுறைகள் இதோ!

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் கட்டணம் இல்லாமல், நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் கட்டணம் இல்லாமல், நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

Continues below advertisement

மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது. புயலால் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின. அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

10 நாட்கள் விடுமுறை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ள பாதிப்பால் விடுமுறை தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

வெள்ளத்துக்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை, டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறையைத் தொடர்ந்து டிசம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த இடைவெளியில் பள்ளி, கல்லூரிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றைக்‌ கண்காணிக்க பள்ளிக்‌ கல்வித்‌ துறையைச்‌ சார்ந்த 17 அதிகாரிகள்‌ 4 மாவட்டங்களுக்கும்‌ அனுப்பி வைக்கப்பட்டனர்‌. இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம்‌ ரூபாயும்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டத்திற்கு 40 இலட்சம்‌ ரூபாயும்‌, ஆக மொத்தம்‌ ஒரு கோடியே 90 இலட்சம்‌ ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் சான்றிதழைப் பெற புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி/ பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து நகல் சான்றிதழைப் பெறுவதற்கு உதவுவதற்காக, அவர்களிடம் இருந்து தகவல்களைச் சேகரிக்க தமிழ்நாடு அரசு இந்தப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளது.

நகல் சான்றிதழ்களைப் பெறுவதற்குத் தேவையான விவரங்களுடன் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். இந்த விண்ணப்பம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே. ஒவ்வொரு பாடத்திற்கும், தனித்தனி கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரத்யேக இணையதளம் உருவாக்கம்

கல்லூரி சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிதாக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மாணவர்கள் mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர். சான்றிதழ்களின் விவரங்களைப் பதிவு செய்தபின், அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்பட்டு வருகிறது.

பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800 - 425 - 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் https://www.mycertificates.in/user/registerஎன்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement