CUET UG Exam 2023:தமிழ்நாடு மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக திருவாரூர் பல்கலைக்கழக தேர்வு கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 


மத்திய பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CUET தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  இதனால் மாணவர்கள் செய்வது அறியாமல் திணறி வந்தனர்ர். 


புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இணைந்து படிப்பதற்கு CUET (Common University Entrance Test) எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதால் அதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. அதனையடுத்து  Common University Entrance Testல் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை கட்டாயம் நிரப்ப வேண்டும் என உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நட்டைச் சேர்ந்த  பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை என்பதால், மாணவர்கள்  Common University Entrance Testக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை எப்படி நிரப்புவது என தெரியாமல் திணறி வந்தனர்.  


இதற்கு முன்னர், ஜே.இ.இ தேர்விலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு இதுபோன்ற சிக்கல் எழுந்த நிலையில், விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது  Common University Entrance Testல் இது போன்ற சிக்கல் எழுந்துள்ளதால் இதிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை எழுந்தது. மேலும், வரும் மார்ச் 12ஆம் தேதி CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து, திருவாரூர் பல்கலைக் கழக தேர்வு கண்காணிப்பாளர் பத்தாம் வகுப்பு மதிபெண்களை விட்டு விட்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தால் போதும் என தெரிவித்துள்ளார். 


CUET 


CUET இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான தேர்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் UG மற்றும் PG படிப்புகளில் சேர்வதற்காக இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. CUET UG தேர்வு 2022 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த அகில இந்திய அளவிலான தேர்வாகும். CUET தேர்வில் 90க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. CUET ஆனது இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கைக்கான நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரே தேர்வை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


CUET முழு வடிவம் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வைக் குறிக்கிறது . இத்தேர்வு மத்திய பல்கலைக்கழகங்களின் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களில் சேர்க்கைக்காக மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வு முகமையிடம் (NTA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில்  மாணவர் சேர்க்கையைப் பெறுவதற்கு ஒற்றை வாய்ப்பை வழங்குவதே நுழைவாயிலின் முக்கிய நோக்கமாகும்.


மிக முக்கியமாக, CUET தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் பிற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பொதுவான தளத்தையும் சம வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பை வளர்த்துக் கொள்வார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அதனை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்துள்ளது. மேலும், மாநில பல்கலைக்கழங்களில் தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாது எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.