பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மாணவர்கள் https://cuet.samarth.ac.in/ என்னும் இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம். 


பொது நுழைவுத் தேர்வு


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக  பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.  


மே மாதம் தொடங்கிய தேர்வு


இந்த ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தொடங்கிய க்யூட் தேர்வு, 31ஆம் தேதி முடிவதாக இருந்தது. எனினும் அதிகபட்ச விண்ணப்பங்கள் காரணமாக ஜூன் 23 வரை தேர்வு நடத்தப்பட்டது. 


க்யூட் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.


1.48 லட்சம் கேள்விகள்


இளநிலைத் தேர்வு 214 பாடங்களுக்கு 841 கேள்வித் தாள்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக, 534 கேள்வித் தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் 93 கேள்வித் தாள்கள் 11 பிராந்திய மொழிகளிலும் கேட்கப்பட்டன. 1.48 லட்சம் கேள்விகள் மொத்தம் கேட்கப்பட்டிருந்தன. 


இவர்களுக்கான விடைக் குறிப்புகளை ஆட்சேபிக்க ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை தேதி வழங்கப்பட்டது. இதில் 25,782 விடைத்தாள் ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இதில் 3,886 வெவ்வேறானவை. இந்தத் தகவல்கள் அனைத்தையும் பார்த்து, திருத்தி முடிவுகளை எடுக்கக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்து இருந்தார். 


14 லட்சம் பேர் விண்ணப்பம்


கடந்த ஆண்டைக் காட்டிலும் 41 சதவீதம் மாணவர்கள் அதிகமாக இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். சுமார் 14 லட்சம் விண்ணப்பங்கள் மொத்தமாகப் பெறப்பட்டன. கடந்த ஆண்டைப் போல அல்லாமல், இந்த முறை 3 ஷிஃப்டுகளாகத் தேர்வு நடத்தப்பட்டது.


தாமதமான தேர்வு முடிவுகள்


இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூலையிலும்  வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டதாக தெரிவித்தது. எனினும் தேர்வு முடிவுகள் தாமதமாக,  இன்று வெளியாகி உள்ளன. மாணவர்கள் https://cuet.samarth.ac.in/ என்னும் இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.