என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை (NTA), 2026ஆம் ஆண்டிற்கான முதுநிலை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான (CUET PG 2026) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 14, 2026 வரை தேர்வர்கள் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜனவரி 18 முதல் 20 வரை அவகாசம் வழங்கப்பட உள்ளது. தேர்வுகள் மார்ச் 2026-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் (இரண்டு தாள்களுக்கு):
- பொதுப் பிரிவு: ரூ. 1,400
- OBC / EWS: ரூ. 1,200
- SC / ST / மூன்றாம் பாலினத்தவர்: ரூ. 1,100
- மாற்றுத்திறனாளிகள் (PwD): ரூ.1,000
கூடுதலாகத் தேர்வு எழுதும் ஒவ்வொரு தாளுக்கும் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்.
தேர்வு முறை
க்யூட் முதுகலைத் தேர்வு கணினி வழித் தேர்வாக (CBT) நடைபெற உள்ளது. மொத்தம் 75 கேள்விகள் கேட்கப்படும், கால அளவு 90 நிமிடங்கள். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (Negative Marking). மாணவர்கள் அதிகபட்சம் 4 தாள்களைத் தேர்வு செய்யலாம். எம்.டெக். போன்ற அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்திலும், மற்றவை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் இருக்கும்.
அதேபோல, https://exams.nta.nic.in/cuet-pg/syllabus/ என்ற இணைப்பில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு உள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது 2026-ல் கலை அறிவியல் படிப்புகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.
விருப்பமுள்ள மாணவர்கள் exams.nta.nic.in/cuet-pg என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, அந்தந்த பல்கலைக்கழகங்களே கலந்தாய்வை நடத்தும் என்பதால், விண்ணப்பிக்கும் முன் பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட தகுதி வரம்புகளைச் சரிபார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s388a839f2f6f1427879fc33ee4acf4f66/uploads/2025/12/202512161583029269.pdf என்ற அறிவிக்கையில், க்யூட் முதுகலைத் தேர்வு குறித்த முழு அறிவிக்கையைக் காணலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: exams.nta.nic.in/cuet-pg
தொலைபேசி எண்கள்: 011 - 40759000/ 011 - 69227700
இ மெயில் முகவரி: helpdesk-cuetpg@nta.ac.in