கல்லூரியில் கால்வைக்க அதாவது மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? தீர்வுகள் என்னவாக இருக்க முடியும்? பார்க்கலாம்.


மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் யுஜிசி உள்ளிட்ட உயர் கல்வி ஆணையங்கள், 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் கல்லூரிப் படிப்புகளுக்குக் கட்டாய பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) என்ற திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதிலும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் இந்தத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், இந்த நுழைவுத் தேர்வு முறையைப்  பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிற நுழைவுத் தேர்வுகள்


ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளுக்கும் பி.எஸ்சி. நர்ஸிங் உள்ளிட்ட சில கலைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, சிஏ படிப்புக்கு ICAI நுழைவுத் தேர்வும், சட்டப் படிப்புகளுக்கு CLAT நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த சூழலில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  




இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் மண்டலா ஜெகதீஷ் குமார், ''மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு (one nation, one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.  இந்த நடைமுறை மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்துக் கல்வி வாரியங்களையும் சார்ந்த, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக அமையும். 


இதன் மூலம் கட்-ஆஃப் முறை மாற்றப்பட்டு,  நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். இந்தத் தேர்வு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும். ஏனெனில் விண்ணப்பதாரர்கள் இந்த ஒரு தேர்வை மட்டுமே எழுதினால் போதுமானது. இந்தத் தேர்வால் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பொது மற்றும் ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்'' என்று தெரிவித்தார். 


பள்ளி என்ற அமைப்பையே சிதைக்கும்


கல்லூரிப் படிப்புக்கு கட்டாய நுழைவுத் தேர்வு என்னும் முறையால் மாணவர் சேர்க்கை குறையும் என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்துக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ஏபிபி நாடுவிடம் பேசினார். ''ஒவ்வொரு படிப்புக்கும் ஒவ்வொரு நுழைவுத் தேர்வு என்பது, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முறையை நீர்த்துப்போகச் செய்யும். பள்ளிப் படிப்பைப் படிப்பதையே கேள்விக்கு உள்ளாக்கும். பள்ளி என்ற அமைப்பையே சிதைக்கும். 




தேசிய கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு அமல்படுத்தும்போது, மாணவர்களின் தேர்வுச் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் உள்ளதுபோல ஒற்றைத் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது கொண்டு வந்துள்ள நுழைவுத் தேர்வு நடைமுறை, பயிற்சி மையங்களின் தேவையை அதிகரிக்கிறது. அவற்றின் செல்வாக்கை உயர்த்த மறைமுகமாக உதவுகிறது. எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வருவதால், பயிற்சி மைய லாபி உயர்ந்திருக்கிறது. 


ஏன் அரசும்  கல்வியாளர்களும், ஏற்கெனவே உள்ள பள்ளி பொதுத் தேர்வுகளைச் சீர்திருத்த முன்வருவது இல்லை? 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்விலும் மதிப்பீட்டு முறைதானே பின்பற்றப்படுகிறது. எனில் எதற்காகக் கூடுதலாக ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படுகிறது?


பயிற்சி மையங்களின் தேவை அதிகரிக்கும்


உயர் கல்வி என்பது எல்லோரும் எளிதில் அணுகக் கூடியதாகவும், அதிகக் கட்டணமில்லாததாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் நுழைவுத் தேர்வு எழுதி உயர் கல்வி என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களும் சுமையாகவே அமைகிறது. பள்ளிப் படிப்புக்கு செலவிடுவதுடன், நுழைவுத் தேர்வு விண்ணப்பம், பயிற்சி வகுப்புகளுக்குத் தனியாகச் செலவழிக்க வேண்டும்.  




கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு


இது நகர்ப்புற மாணவர்களுக்கு வேண்டுமெனில் சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கலாம். மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற, மலைவாழ், நடுத்தர, ஏழை மாணவர்களின் பள்ளிகளால், நுழைவுத் தேர்வுக்குத் தனியாக சிறப்புப் பயிற்சியை அளிக்க முடியுமா? அவர்களை மீண்டும் பழைய காலத்துக்கு அனுப்பப் போகிறோமா?


நுழைவுத் தேர்வு சேர்க்கை மாநில வாரியாக இல்லாமல், தேசிய அளவில் இருக்கும் என்பதால் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக இருக்கும். சில மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு பிஹார், உத்தராகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் உள்ளார்கள். அவர்களால் நிறைய செலவு செய்து, நுழைவுத் தேர்வுக்குத் தனியாகத் தயாராக முடியாது. 


உயர் கல்வி மாணவர் சேர்க்கை 


2032ஆம் ஆண்டில் நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை தெரிவித்தது. ஆனால் இத்தகைய நுழைவுத் தேர்வுகளால், உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக அதிகரிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.


என்னதான் தீர்வு?


கல்வியாளர்கள் பிரச்சினை குறித்துக் குற்றம்சாட்டிக் கொண்டே இருக்காமல், இதற்கு என்ன தீர்வு என்று யோசிக்க வேண்டும். படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அதைக் கட்டாயம் ஆக்காதீர்கள். ஒவ்வொரு மாநில அரசும் தனித்தனியான, சுதந்திரமான, சொந்தமான மாணவர் சேர்க்கை கொள்கையைப் பின்பற்றுக்கும் அதிகாரத்தை, மத்திய அரசு அளிக்க வேண்டும். 


 



கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி


அதேவேளையில் நுழைவுத் தேர்வுக்கு அதிகபட்சம் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டை நிர்ணயிக்கலாம். வெளி மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் குறிப்பிட்ட மாநிலத்துக்கு வந்து படிக்க விரும்பினால், அதற்கு மருத்துவப் படிப்பில் இருப்பதைப்போல 15 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கலாம். உதாரணத்துக்கு, தமிழ்நாட்டு மாணவர் ராஜஸ்தானிலோ மத்தியப் பிரதேசத்திலோ படிக்க விரும்பினால், நுழைவுத் தேர்வு எழுதி 15 சதவீத இட ஒதுக்கீட்டில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேரலாம். சில மாணவர்கள் மட்டுமே இவ்வாறு வெளி மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவர். அவர்களுக்கான வாய்ப்பாக இது இருக்கும். 


அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போது கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதுதான் சரி என்று முடிவு செய்யப்பட்டு, அப்படியே வைக்கப்பட்டது. ஆனால் இப்போது, கல்வி மத்தியப் பட்டியலில் இருப்பதுபோன்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது. மாநில அரசுகள், மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே நிறைவேற்றும் தலையாட்டி பொம்மைபோல ஆக்கப்படுகின்றன. இந்த சூழல் மாற்றப்பட வேண்டும்''.


இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.


*


மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் சூழலில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு நிச்சயம் பின்பற்றப்படும்.


நாடு முழுவதும் பெரும்பாலன மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் சூழலில், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மட்டுமே தேர்வை எதிர்க்கும் சூழல் ஏற்படும். நாடு முழுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுவிட்ட மற்றுமொரு நீட் தேர்வாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மாறிவிடக் கூடாது என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.