அரசாணை 149ஐ நீக்கக்கோரியும் போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் நவம்பர் 23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கம் கூறி உள்ளதாவது:


2013-ஆம்‌ ஆண்டில்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்று அரசாணை எண்‌.252 மற்றும்‌ 71 என்ற வெயிட்டேஜ்‌ முறையில்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு முடித்து, சுமார்‌ 24 ஆயிரம்‌ ஆசிரியர்கள்‌ பணி வாய்ப்பு பெற்றனர்‌.


அதிமுக ஆட்சியில் போட்டி தேர்வு


ஆனால்‌ வெயிட்டேஜ்‌ முறை தவறான முறை என்று அரசாங்கம்‌ நீக்கம்‌ செய்தது. அந்த அரசாணைகளால்‌ பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவழங்காமல் மேலும்‌ பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணை எண்‌ 149 என்கிற மறுநியமனப் போட்டி தேர்வு, 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்‌ கொண்டு வரப்பட்டது.


இந்த அராசாணையை தற்போதைய முதல்வர்,‌ அன்றைய எதிர்க்கட்சித்‌தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ மிகவும்‌ கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்லாமல்‌ இது ஒருள்‌ சூழ்ந்த அரசாணை, இதயமற்ற அரசாணை. ஊழலை வழிவகுக்கக்‌ கூடிய அரசாணை என்றும்‌ திமுக ஆட்சி அமைந்தவுடன்‌ இருள்‌ சூழ்ந்த அரசாணை நீக்கப்படும்‌, ஆசிரியர்‌ நலன்‌ காக்கப்படும்‌ என்றும்‌ கூறினார்‌.


மேலும்‌ தேர்தல்‌ வாக்குறுதி எண்‌ 177ல்‌ 2013 ஆம்‌ ஆண்டு தகுதித்‌ தேர்வில்‌தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று வாக்குறுதி தந்தார்‌. ஆட்சி பீடத்தில்‌ அமர்ந்து 30 மாதங்கள்‌ கடந்த நிலையில்‌ 15க்கும்‌ மேற்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌, உண்ணாவிரதம்‌ என்று பலகட்ட போராட்டங்கள்‌ செய்துள்ளோம்‌.


தேர்தல்‌ வாக்குறுதி


அதோடு அமைச்சர்‌ மற்றும்‌ அதிகாரிகளிடம்‌ பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம்‌. பேச்சு வார்த்தை முடிவில்‌ இந்த அராசாணை எண்‌ 149 நீக்கம்‌ செய்வதாக உறுதி அளித்தனர்‌. ஆனால்‌ இதுவரை அரசாணை எண்‌.149 நீக்கம்‌ செய்யவில்லை மாறாக ஒவ்வோரு போராட்டத்தின்‌ முடிவிலும்‌ பள்ளிக்கல்வி ஆணையர்‌ நந்தகுமாரையும்‌, பள்ளிக்‌ கல்வி செயலர்‌ காகர்லா உஷாவையும்‌ நீக்கம்‌ செய்தனர்‌. இவர்களை நீக்கம்‌ செய்ததனால்‌ தேர்தல்‌ வாக்குறுதி நிறைவேற்றியதாக பொருள்‌ கொள்ளப்படுமா?


இந்த சூழலில்‌ கடந்த அக்டோபர்‌ 25-ஆம்‌ தேதி அன்று தேர்தல்‌ வாக்குறுதியை மறந்து அரசாணை எண்‌ 149ஐ அமல்படுத்தி மறு நியமன போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ அறிவித்துள்ளது.


இதனை எதிர்த்து திருச்சியில்‌ பள்ளிக்‌ கல்வித்துறை அமைச்சர்‌ அலுவலகம்‌முற்றுகை இடப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து அமைச்சர் அக்டோபர்‌ 31-ஆம்‌ தேதி சென்னையில்‌ உள்ள தனது தென்பெண்ணை இல்லத்திற்கு அழைத்து பேசினார்‌. இந்த பேச்சு வார்த்தையில்‌,‌ உங்கள்‌ உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்‌ என்றும்‌ நாங்களும்‌ வாக்குறுதி தந்துள்ளோம்‌ என்றும்‌ கூறியதோடு இதற்கான தீர்வு உங்களிடம்‌ ஏதேனும்‌ உண்டா என்று கேட்டார்‌.


நாங்களும்‌ இதற்கான தீர்வாக, ’கலைஞர்‌ ஆட்சி காலத்தில்‌ பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை நிரப்பி உள்ளார்‌. ஆனால்‌ அவர்‌ ஒரு ஆசிரியரைக்‌ கூட போட்டி தேர்வு மூலம்‌ நிரப்பவில்லை. மாறாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில்‌ பணி நியமனம்‌ செய்தார்‌ என்றும் ஏற்கெனவே இருந்த திராவிட மாடலை பின்பற்றி தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை (2013, 2014, 2017, 2019, 2022 மற்றும்‌ 2023) என்று பாகுபாடு இல்லாமல்‌ அனைவரின்‌ வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும்‌, தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற ஆண்டின்‌ அடிப்படையிலும்‌ வெயிட்டேஜ்‌ மதிப்பெண்‌ கொடுத்து பணிநியமனம்‌ செய்யுங்கள்‌’ என்றும் கூறினோம்‌.


அதனைத்‌ தொடர்ந்து பள்ளிக்‌ கல்வி அமைச்சர்‌ மற்றும்‌ பள்ளிக்கல்வி இயக்குனரும்‌ ஏற்றுக்‌கொண்டு இது குறித்து பள்ளிக்கல்வி செயலருடன்‌ ஆலோசனை செய்து அரசாணையாக வெளியிடுகிறோம்‌ என்று கூறினார்‌.


மேலும்‌ இது குறித்த கேள்விக்கு, அன்றே ஊடகத்தில்‌ மாற்று வழியை பள்ளிக்கல்வி செயலருடன்‌ ஆலோசனை செய்து யாரும்‌ பாதிக்காத வண்ணம்‌ வெளியிடுவோம்‌ என்றார்‌. எனவே அந்த அரசாணையை வெளியிடக்கோரி வரும்‌ நவம்பர்‌ 23ஆம்‌ தேதி எழும்பூரில் அரசாணை எண்‌149-ஐ நீக்கக்‌ கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ செய்ய உள்ளோம்‌’’ என்று டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவித்துள்ளது.