அரசு வேலை என்பது லட்சக்கணக்கான மக்களின் கனவு, ஆசை, லட்சியம். கால் காசு என்றாலும் கவர்மெண்ட் காசு என்பார்கள். அரசுப் பணி என்பது மக்களுக்கு நிலைத்தன்மை, மரியாதை மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குகிறது.

Continues below advertisement


ஒவ்வோர் ஆண்டும், ஊழியர் தேர்வு ஆணையம் (SSC), ரயில்வே, வங்கி, காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகிறார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் கடின உழைப்பில் மட்டும் இருப்பதில்லை. ஸ்மார்ட் உத்திகள், ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளிலும் உள்ளது.


போட்டித் தேர்வுகளில் உங்கள் தயாரிப்பை வலுப்படுத்தவும், உங்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும் ஏழு பழக்கவழக்கங்கள் இங்கே:



  1. வலுவான அடித்தளத்தை உருவாக்குங்கள்



அடிப்படைகளில் தொடங்குங்கள். கணிதம், பகுத்தறிவு, ஆங்கிலம் மற்றும் பொது அறிவு போன்ற முக்கிய பாடங்களில் கவனம் செலுத்துங்கள். என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புத்தகங்களைப் படியுங்கள். தேர்வுப் போக்குகள் மற்றும் பொதுவாகக் கேட்கப்படும் தலைப்புகளைப் புரிந்துகொள்ள முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை சால்வ் செய்து பார்க்க வேண்டும்.



  1. நேரத்தை திறம்பட நிர்வகிக்கவும்



நேர மேலாண்மை, எந்தவொரு வெற்றிக்கும் முக்கியமாகும். ஒரு குறிப்பிட்ட படிப்புத் திட்டத்தைத் தயாரித்து, ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான நேரங்களை ஒதுக்கி, உங்கள் கால அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றவும். கவனம் செலுத்துவதற்காக தொலைபேசி பயன்பாடு அல்லது சமூக ஊடகங்கள் போன்ற கவனச் சிதறல்களைக் குறைக்கவும்.



  1. பயிற்சி செய்து மாதிரித் தேர்வுகளை எழுதுங்கள்



முன்னேற்றத்தைக் கண்காணிக்க அடிக்கடி மாதிரித் தேர்வுகளை எழுதுங்கள். உங்கள் படிப்பில் பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து எழுதிப் பாருங்கள். இந்த பழக்கம், தேர்வு நாளன்று பதற்றத்தைக் குறைத்து நம்பிக்கையை வளர்க்கிறது.


 



  1. உடல் தகுதியில் கவனம் செலுத்துங்கள்



காவல்துறை, ராணுவம், எல்லை பாதுகாப்புப் படைகள் (BSF) அல்லது வனத்துறைப் பணிகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு உடல் தகுதி முக்கியமானது. உங்கள் தினசரி வழக்கத்தில் ஓட்டம், ஸ்ட்ரெச்சிங் மற்றும் வலிமையான உடல் பயிற்சிகளைச் சேர்க்கவும்.சீரான உணவு, போதிய தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, உடல் திறன் சார்ந்த தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட உதவும்.



  1. பாசிட்டிவ் மனநிலை



அரசு தேர்வுகளுக்கான தயாரிப்பு நீண்டதாகவும் சவாலானதாகவும் இருக்கலாம். தேர்வில் ஏதேனும் பின்னடைவுகள் ஏற்பட்டாலும், நம்பிக்கையுடன் இருங்கள். பாசிட்டிவான அணுகுமுறை, தேர்வுப் பயணம் முழுவதும் உங்களை ஊக்கப்படுத்துகிறது.



  1. நடப்பு நிகழ்வுகளில் அப்டேட்டாக இருங்கள்



பெரும்பாலான போட்டித் தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினமும் செய்தித் தாள்களைப் படியுங்கள், நம்பகமான செய்தி ஊடகங்களைப் பின்பற்றுங்கள், மேலும் முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் சுருக்கமான குறிப்புகளை உருவாக்குங்கள். இந்த பழக்கம் நேர்காணல்கள் மற்றும் குழு விவாதங்களின்போதும் உதவும் என்பதை மறக்காதீர்கள்.



  1. பதில்களை திருத்திப் பார்த்து செயல்திறனை பகுப்பாய்வு செய்யுங்கள்



புதிய பாடங்களைக் கற்றுக்கொள்வது போலவே, திருத்திப் பார்ப்பதும் முக்கியமானது. ஒவ்வொரு வாரமும் நீங்கள் படித்ததை மறுபரிசீலனை செய்ய நேரம் ஒதுக்குங்கள். தவறுகளைப் புரிந்துகொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் உங்கள் மாதிரித் தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்யுங்கள்.


மேலே கூறியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால், அரசுப் பணி எனும் கனவு நிச்சயம் நனவாகும்.


ஆல் தி பெஸ்ட்!