திஹார் சிறையில் இருந்தவருக்குத் துணை வேந்தர் பதவி வழங்கப்பட்டதாகவும், துணை வேந்தர்களை மாநில அரசே நியமித்தால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான பாலகுருசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக நியமனங்களில் கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் தற்போது வெளிப்படையான, நேர்மையான முறையில் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலகுருசாமி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்:
''இது தேவையற்ற, அபத்தமான மசோதா. தமிழ்நாட்டுக்கே துரதிர்ஷ்டவசமானது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நேர்மையானவர்கள், திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆளுநரை ஆளும் மாநில அரசுக்குப் பிடிக்காது என்பதால், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
* அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்குமே வாய்ப்பு வழங்கப்படும்.
* ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், அக்கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்குமே வாய்ப்பு அளிக்கப்படும்.
* வாக்கு வங்கி அரசியலின் அடிப்படையில், பிரதான சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
* அதிகப் பணம் செலவழிப்பவர்களுக்கே துணை வேந்தர் பதவி வழங்கப்படும்.
அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் தங்கை, அக்கா, மருமகன், மருமகள் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றும்போது, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த முறை மீண்டும் ஏற்படக் கூடாது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஒருமுறை, துணைவேந்தர் பதவி ரூ.5 முதல் ரூ.10 கோடிக்கு விற்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
உயர் கல்வியில் ஊழல்!
துணைவேந்தர்களைப் போலவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஏறக்குறைய அனைத்து நியமனங்களுக்கும் விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
• சிண்டிகேட் உறுப்பினர்கள் - ரூ.1 முதல் 2 கோடி
• பதிவாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் - ரூ.2 முதல் 3 கோடிகள்
• பேராசிரியர்கள் - ரூ.50 முதல் 60 லட்சம்
• இணைப் பேராசிரியர்கள் - ரூ.30 முதல் 50 லட்சம்
• உதவிப் பேராசிரியர்கள் - ரூ.20 முதல் 30 லட்சம்
• ஆய்வக உதவியாளர்கள் - ரூ.10 முதல் 15 லட்சம்
• டிரைவர்கள் மற்றும் அட்டெண்டர்கள் - ரூ.5 முதல் 10 லட்சம்
தங்கக் கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் திஹார் சிறையில் இருந்த நபர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகிறார். முதன்மைப் பல்கலைக்கழகங்களில் அமைச்சரின் தனி உதவியாளரும் துணை வேந்தரின் தனிச் செயலரும் துணை வேந்தர்கள் ஆக்கப்பட்ட வரலாறூம் உண்டு.
ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பதில் தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை. ஆண்டாண்டு காலமாக தேடுதல் குழு மூலம் வடிகட்டித்தான் தேர்ந்தெடுக்கிறார். அது மாற்றப்பட்டு, மாநில அரசு முடிவெடுக்கும் சூழல் ஏற்படும்போது 100 சதவீதம் அரசியல் தலையீடு ஏற்படும்.
மாநில அரசே தேர்ந்தெடுக்கும்போது, பல்கலைக்கழகங்களுக்கு 2 விதமாகத் துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்குமே வாய்ப்பு கிடைக்கும். அல்லது பணம் படைத்தவர்களுக்குப் பதவி வழங்கப்படும். நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஊழல் அதிகரிக்கும்.
2006-க்குப் பிறகு, 70 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து ஒருவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆனார். அப்போதெல்லாம் ஆளுநர்கள் தமிழக அரசுடன் இணைந்து லஞ்சம் வாங்கினர். கடந்த 10 ஆண்டுகளாகக் காசு வாங்கிக்கொண்டுதான் முதல்வர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவைகுறித்து என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்தபிறகே அரசியல் தலையீடு நின்றது.
கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக நியமனங்களில் கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிப்படையான, நேர்மையான முறையில் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார்
மத்திய அரசின் தலையீடு நிச்சயம் இருக்காது. ஆளுநர் நியமிக்கும் தேடல் குழுவே துணைவேந்தர்களைப் பரிந்துரை செய்யும். கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.''
இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்தார்.