குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விவரங்களைத் தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதைத் திருத்தம் செய்துகொள்ளலாம்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ கிரண்‌ குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு ॥( நேர்முகத்‌ தேர்வு பதவிகள்‌ மற்றும்‌ நேர்முகத்‌ தேர்வு அல்லாத பதவிகள்‌) (குரூப் 2, குரூப் 2ஏ-க்கான அறிவிக்கையை 23.02.2022 அன்று வெளியிட்டது. அத்தேர்விற்கு, இணைய வழியில்‌ விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 23.03.2022 ஆகும்.


அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில்‌, பலர்‌ விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த‌ பிறகு, சில தகவல்களைத் தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும்‌, அவற்றைத் திருத்தம்‌ செய்ய அனுமதிக்கக் கோரியும்‌ தேர்வாணையத்தைத் தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாகத் தொடர்புகொண்டு வருகின்றனர்‌.


மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக. விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படுவதன்‌ மூலம்‌ வெற்றியைத்‌ தவறவிடும்‌ தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும்‌ வகையில்‌ 14.03.2022 முதல்‌ மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்புவோர்‌, விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான 23.03.2022 வரை விண்ணப்பதாரர்களே தனது OTR மூலமாக திருத்தம்‌ மேற்கொள்ள தேர்வாணைய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது.


தேர்விற்கான தனது இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய விரும்பம்‌ தேர்வர்கள்‌ பின்வரும்‌ நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


1. இணையவழி விண்ணப்பத்தில்‌ உள்ள தகவல்களில்‌, ஒரு சில தகவல்கள்‌ தேர்வரின்‌ ஒருமுறை நிரந்தரப் பதிவில்‌ இருந்து முன்கொணரப்பட்டவை. அவ்வாறான தகவல்களைத்‌ திருத்தம்‌ செய்வதற்கு முதலில்‌ தனது ஒருமுறை நிரந்தரப் பதிவில்‌ (OTR) சென்று உரிய திருத்தங்களை செய்து, அவற்றை சேமிக்கவும்‌.


2. அதன்‌ பிறகு, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDIT-ல்‌ சென்று,விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய விரும்பும்‌ விவரங்களை திருத்தம்‌ செய்து, இறுதியாகச் சேமித்து, அதனை சமர்ப்பித்து அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி எடுத்துக்கொள்ளவும்‌.


3. விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்ப்பிக்கவில்லையென்றால்‌, தேர்வர்‌ இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள்‌ விண்ணப்பத்தில்‌ அளித்துள்ள தகவல்கள்‌ மட்டுமே கருத்தில்‌ கொள்ளப்படும்‌.


4, திருத்தம்‌ செய்யப்பட்ட விவரங்களின்‌ அடிப்படையில்‌, தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால்‌, உரிய தேர்வுக்‌ கட்டணத்தை இணைய வழியாகச் செலுத்தவும்‌. உரியத்‌ தேர்வுக்‌ கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய தேர்வர்கள்‌, மீண்டும்‌ செலுத்தத் தேவையில்லை.


இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்யக்கோரி தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாக தேர்வாணையத்தைப் பல விண்ணப்பதாரர்கள்‌ தொடர்பு கொண்டனர்‌. அவர்களுக்கு, 'விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, திருத்தம்‌ செய்ய இயலாது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, திருத்தம்‌ செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதால்‌, முன்னர்‌ தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாகத் தேர்வாணையத்தைத் தொடர்பு கொண்டவர்களுக்கு, தற்போது தனித்தனியே தகவல்‌ அளிக்க இயலாது. இச்செய்தி வெளியீட்டில்‌ கூறப்பட்டுள்ள நடைமுறையினைப் பின்பற்றி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


தேர்வர்களுக்கு ஏற்படும்‌ தவிர்க்க இயலாத சந்தேகங்களுக்கு, ஒரு முறை நிரந்தரப் பதிவு மற்றும்‌ இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய helpdesk@tnpscexam.in என்ற மின்னஞ்சல்‌ முகவரியையும்‌, இதர சந்தேகங்களுக்கும் grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல்‌ முகவரியையும்‌ பயன்படுத்தவும்‌. ஒரே பொருள்‌ தொடர்பான சந்தேகங்களுக்கு, இரண்டு மின்னஞ்சல்‌ முகவரிக்கும்‌ மின்னஞ்சல்‌ அனுப்புவதைத் தவிர்க்குமாறும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


இதுகுறித்து விளக்கம்‌ ஏதேனும்‌ தேவைப்படுமானால்‌, 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிக்கு, அலுவலக வேலை நாட்களில்‌, காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.45 மணி வரை தொடர்புகொள்ளலாம்''‌.


இவ்வாறு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ தெரிவித்துள்ளது.