இந்திய ரயில்வே, வங்கிப்பணி, மத்திய அரசு பணிக்கென தனித்தனி தேர்வை இனி நீங்கள் எழுதத் தேவையில்லை. இந்த தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்துகிறது என்ஆர்ஏ. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிஇடி என்ற பெயரில் இந்த முகமை தேர்வை நடத்தவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


அதில்,"மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக இந்த வருட இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.


குடிமைப் பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அரசுப் பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப் படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக பொதுத் தகுதித் தேர்வு அமைந்திருப்பதாக கூறினார். இளைஞர்கள் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி வைத்திருக்கும் அக்கறையின் அடையாளமாகவும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அவரது முனைப்பின் பிரதிபலிப்பாகவும் இந்த மிகப் பெரிய சீர்திருத்தம் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.


பொதுத் தகுதித் தேர்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு பதிலாக பொது தகுதி தேர்வை தேசிய ஆட்சேர்ப்பு முகமை நடத்தும்.


பிரிவு பி மற்றும் சி பணியிடங்களுக்கு (தொழில் நுட்பம் சாராத) தகுதியானவர்களை தேசிய ஆட்சேர்ப்பு முகமைப் பொதுத் தகுதி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையமாவது இருக்கும் என்பதும் இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் வாழும் தேர்வர்களுக்கான அணுகல் பெரிய அளவில் மேம்படும் என்பதும் இந்த சீர்திருத்தத்தின் மிக முக்கிய அம்சம் என்று அவர் மேலும் கூறினார்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.