மேலாண்மைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு (Common Admission Test - CAT) முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பொறியாளர்களும் ஆண் மாணவர்களுமே அதிகம். தேர்வர்கள், CAT இணையதளத்தை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளி அறிந்துகொள்ளலாம்.


எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை எழுத 3.29 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.


அசத்திய ஆண் தேர்வர்கள்


இவர்களில் 2.93 லட்சம் தேர்வர்கள், தேர்வை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. இதில், 14 பேர் 100-க்கு 100 பர்சன்டைலைப் பெற்றுள்ளனர். இதில் ஆச்சரியப்படுத்தும் விதமாக பொறியாளர் மாணவர்கள் மற்றும் ஆண்களே அதிகம் உள்ளனர். 14 பேரில் 13 பேர் பொறியாளர்கள் ஆவர். அதேபோல, 14 பேரில் 13 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார்.


அதைத் தொடர்ந்து 29 தேர்வர்கள் 99.99 பர்சன்டைலைப் பெற்றுள்ளனர். இதில் 25 பேர் பொறியாளர்கள் ஆவர். 4 பேர் பொறியாளர் அல்லாத பின்னணியைச் சேர்ந்த்வர்கள். இதிலும் 27 பேர் ஆண்கள், இரண்டு பேர் மட்டுமே பெண்கள் ஆவர். 99.98 பர்சன்டைலை 30 பேர் பெற்றுள்ளனர்.


சாதி வாரி புள்ளிவிவரம்


தேர்வுக்காக பதிவுசெய்யப்பட்ட 3.29 லட்சம் விண்ணப்பதாரர்களில் பொதுப் பிரிவிலிருந்து 67.53% பேர் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். NC-OBCல் இருந்து 16.91%, எஸ்சி 8.51% பேர், எஸ்டி 2.25% பேர், EWS 4.80% பேர்  மற்றும் 0.44% மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தேர்வெழுதிய 2.93 லட்சம் பேரில் 67.20% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


இந்த முடிவுகளை வைத்து, புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிலையங்களான ஐஐஎம்களில் சேர்ந்து படிக்க முடியும். ஐஐஎம் அல்லாத 86 பிற கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு முடிவை ஏற்றுக் கொள்கின்றன. தேர்வு முடிவுகளை https://iimcat.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: https://iimcat.ac.in/