பிரபல காமெடி நடிகர் முத்துகாளை தான் படித்து 3 பட்டங்கள் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைவரும் கல்வியை தவறாமல் கற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 


1997 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடித்த பொன்மனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் முத்துக்காளை. சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வர வேண்டும் என நினைத்த அவரை காலம் நடிகராக மாற்றியது. நடிகர் வடிவேலுடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானார். 


சில ஆண்டுகளுக்கு முன் வரை தீவிர மது குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்த முத்துகாளை தற்போது படிப்பில் சிறந்து விளங்கி வருகிறார். அவர் இளங்கலை படிப்பில் 3 பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து முத்துக்காளைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படியான நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், “என்னுடைய சொந்த ஊரு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பக்கத்தில் இருக்கும் சங்கம்பட்டி என்ற ஊர் தான். நான் சிறுவயதில் விளையாட்டு தனம் அதிகம் இருந்ததால் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் கவனம் செல்லவில்லை. எனக்கு 4 தங்கைகள், இரு அண்ணன். அதனால் வறுமையால் தொடர்ச்சியாக என்னால் பள்ளிக்கு போக முடியவில்லை. பாடப்புத்தகம் வாங்க காசு இல்லாத நிலையில் நான் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி ஸ்டண்ட் நடிகராக மாறிய பிறகு படிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது எப்படி கிடைத்தது என்றால் பாடலில் வரும் கல்வியா? செல்வமா? வீரமா? என வரிகள் போல முதலில் வீரத்தை கற்று செல்வம் சேர்த்து அதன் பிறகு கல்விக்கு நான் வர வேண்டிய நிலை ஆகிவிட்டது. ஆனால் நான் கல்வி பக்கம் வர 50 வயதாகி விட்டது. படிக்க வேண்டிய வயதில் படித்து விடுங்கள். எதை இழந்தாலும் கல்வியை மட்டும் இழக்காதீர்கள். இந்த கல்வி உங்கள் தலைமுறையையவே காப்பாற்றும்.


நான் வசதி வாய்ப்புவந்தால் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். சரியாக அது அமைந்தது. என் ஆல்கஹால் இருந்து மீண்டு வர மாற்று வழி படிப்பாக இருந்தது. இளமையில் எதையெல்லாம் இழந்தோமோ அதை மீட்டெடுக்க ஆசைப்பட்டேன். நான் படிக்கிறதைப் பார்த்து கிண்டல் பண்ணாங்க. இந்த வயசுல படிச்சி என்ன பண்ணப் போறாருன்னு கேட்டாங்க. நான் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை வரலாறு, தமிழ்,  தமிழ் இலக்கியம் ஆகிய 3 பிரிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் கோடிக்கணக்கா சொத்து வைத்தாலும் சந்தோச பட்டிருக்க மாட்டேன். விவேகானந்தர் சொன்னது போல ‘படிப்பு தான் நாட்டை உயர்த்தும்’ என முத்துகாளை பேசியுள்ளார்.