தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ நாட்டு வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை வருவாய்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக மதுக்கூர் காவல் நிலைய போலீஸார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டத்தில் இது தொடர்பாக வேறு இடங்களில் ஏதும் வெடிபொருட்கள் முறையாக உரிமம் பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, துணை வட்டாட்சியர் ஷேக் உமர்ஷா, மதுக்கூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், மதுக்கூர் சரக வருவாய் ஆய்வாளர் கவுதமன், கீழக்குறிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கீழக்குறிச்சி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் வீரசோழன், கிராம உதவியாளர்கள் பத்மா, ரவிச்சந்திரன் ஆகியோர் கீழக்குறிச்சி பகுதியில் ப.அம்பிகாபதி (45) என்பவரது வீட்டில் ஆய்வு செய்தனர்.அப்போது, அவர் வீட்டின் மாடி பகுதியில் 450 கிலோ எடையில், நாட்டு வெடிகள், வெடி பொருட்கள் ஆகியவை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அம்பிகாபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கோயில் விழாக்கள், காதணி விழா, திருமணம் என ஏராளமாக நடந்து வருகிறது. இதில் நாட்டு வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதற்காக உரிமம் வாங்காமல் விதிகளை மீறி வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல்தான் அனுமதியின்றி திருவோணம் பகுதியில் வெடிகள் தயாரிப்பு பணியின் போது கிடங்கு வெடித்து சிதறி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இதுபோன்று ஏதாவது தகவல் கிடைத்தால் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது பொதுமக்களின் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.