அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிக்கப்பட்டஅறிவிக்கை ரத்து  செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Continues below advertisement

தற்போது 4,000 உதவிப் பேராசிரியர்‌ காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை (Notification) ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ வெளியிடப்பட வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின.

Continues below advertisement

நிலைமையை சமாளிப்பதற்காக 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக உயர் கல்வித்துறை வெளியிட உள்ளது. 

முன்னதாக ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எழுத்துத் தேர்வை அறிமுகம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கு மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக எழுத்துத் தேர்வில் 200 மதிப்பெண்களும் பணி அனுபவத்திற்கு 30 மதிப்பெண்களும் என 230 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது காலியாக உள்ள 7,918 உதவி விரிவுரையாளர் பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் நடப்பாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. 

இதை முன்னிட்டு, அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிக்கப்பட்டஅறிவிக்கை ரத்து  செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’அரசாணை (நிலை) எண்‌. 248, உயர் கல்வித்துறை, நாள்‌. 08.11.2022-ன் படி அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌ மறறும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்களுக்கான 2,331 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ ஏற்கனவே அறிவிக்கப்பட்டஅறிவிக்கை (அறிவிக்கை எண்‌ . 12/2019, நாள்‌. 28.08.2019 மற்றும்‌ 04.10.2019) ரத்து செய்யப்படுகிறது.

இதனையடுத்து 2331 உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப்பணியிடங்கள்‌ நிரப்ப ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண்‌ . 12/2019, நாள்‌. 28.08.2019 மற்றும்‌ 04.10.2019 அரசாணை (நிலை) எண்‌, 246, உயர்கல்வித்துறை, நாள்‌. 08.11.2022-ன்படி ரத்து செய்யப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.