தனியார் பள்ளிகளில் அனுமதி இன்றி என்சிசி போன்ற முகாம்களை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


நடந்தது என்ன?


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த ஐந்தாம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை என்சிசி முகாம் என்ற பெயரில் முகாம் ஒன்று நடைபெற்றது. இதில் அப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.


பள்ளி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை


மாணவிகள் அனைவரும் பள்ளி வளாகத்திலேயே தங்கி இருந்து தினமும் முகாமில் பங்கேற்றனர். இந்த நிலையில் என்சிசி முகாமிற்குச் சென்ற 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவி, கடந்த எட்டாம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில் பயிற்சி அளிக்க வந்த காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சிவராமன் (30) என்பவர் அந்த பள்ளி மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகமும் மூடி மறைத்த நிலையில், பெற்றோருடன் மாணவி அளித்த புகாரின் பேரில் பருகூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்ஐ சூரியகலா விசாரணை நடத்தி போக்ஸோ பிரிவின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தார். இதில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த பயிற்சி முகாமில் என்சிசி ஈடுபடவில்லை, தங்களுடைய பயிற்சியாளர்கள் யாரும் இதில் இல்லை என்று என்சிசி விளக்கம் அளித்தது. 


அனுமதி இன்றி என்சிசி போன்ற முகாம்களை நடத்தக்கூடாது


இந்த நிலையில், தனியார் பல்ளிகளில் அனுமதி இன்றி என்சிசி போன்ற முகாம்களை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுகுறித்து மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளி இடங்களில் முகாம் நடத்தப்பட்டால், பெற்றோரிடம் தனித் தனியாக அனுமதி பெற வேண்டும்.


முகாமில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக ஆசிரியர், ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.