இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த இரண்டு வீரர்களில் ஒருவர் கருண் நாயர். 24 வயதிலே இந்திய அணிக்காக முச்சதம் அடித்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவே இல்லை. இவர் தற்போது மகாராஜா டிராபியில் ஆடி வருகிறார்.


ருத்ரதாண்டவம் ஆடிய கருண் நாயர்:


மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அவர் இந்த தொடரில் ஆடி வருகிறார். நேற்று மைசூர் வாரியர் அணியும், மங்களூர் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த மைசூர் அணி தொடக்க வீரர்கள் விக்கெட்டை உடனே இழக்க, அடுத்து கேப்டன் கருண் நாயர் களமிறங்கினார.


களமிறங்கியது முதலே பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர் விளாசிய அவரை மங்களூர் வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களை விளாசிய கருண் நாயர் 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். 43 பந்துகளில் சதம் விளாசிய அவர் கடைசி ஓவரிலும் ருத்ரதாண்டவம் ஆடினார்.






ஐ.பி.எல்.லில் கலக்குவாரா?


சதம் விளாசிய கருண் நாயர் சமர்த் நாகராஜ் வீசிய கடைசி ஓவரில் 6,6,4,4,4 என்று அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை எடுத்தார். கடைசி 29 பந்துகளில் மைசூர் அணி 85 ரன்களை எடுத்தது. கருண் நாயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 13 பவுண்டரி 9 சிக்ஸருடன் 124 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து மைசூர் அணி 226 ரன்கள் எடுத்தது.


இலக்கை நோக்கி மங்களூர அணி ஆடியபோது 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இதனால், மைசூர் அணி விஜேடி முறைப்படி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அணியில் இடம்பிடிப்பதற்காக ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமையான ஆட்டத்தை காட்டி வருகின்றனர். அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடி ஐ.பி.எல். தொடரில் அசத்தலாக இடம்பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


கருண் நாயர் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 முச்சதத்துடன் 374 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஒருநாள் போட்டிகளில் 46 ரன்கள் எடுத்துள்ளார். 76 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 10 அரைசதங்களுடன் 1496 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.