தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக ஜூலை 15-ம் தேதி கலந்துரையாட உள்ளார். இவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஹைடெக் லேப் எனப்படும் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சீரிய முறையில் பயன்படுத்த, அதிவேக இணைய வசதிகளும் பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு
தற்போது ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, Smart board installation முழுமையாக முடிக்கப்பட்டு இணையதள வசதியுடன் கூடிய பள்ளிகளில் மாதிரி கலந்துரையாடல் மாநிலத்திலிருந்து இணைய வழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்று மாநில முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் பங்கு பெற உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மாதிரி கலந்துரையாடல் நடைபெறும். தலைமை ஆசிரியர்கள் இதில் கலந்துரையாட தயார் செய்தல் வேண்டி நிகழ்வானது நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் உரையாடல்
முதல்வரும் அமைச்சரும் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment and control center) வழியாக காணொளி மூலம் மாணவர்களுடன் உரையாட உள்ளனர். இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப அதி நவீன ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை (high tech lab and smart class) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.