இரு கைகளும் இல்லாமல் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதி, 471 மதிப்பெண்கள் எடுத்த மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மா, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முதலமைச்சர் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ’’கண்ணீர் வேண்டாம் தம்பி! அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்’’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
12ஆம் வகுப்பில் 471 மதிப்பெண்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் இரு கைகளையும் மின்சார விபத்தில் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா, 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 10ஆம் வகுப்புத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் க்ரித்தி வர்மா படித்து வந்தார். இவர் தற்போது 12ஆம் வகுப்புத் தேர்வில் 471 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
மாணவர் கீர்த்தி வர்மா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, என்னால் இயன்ற அளவு படித்து, 12ஆம் வகுப்பில் இந்த மதிப்பெண்களைப் பெற்று இருக்கிறேன். தொடர்ந்து பொறியியல் படிப்பில் சேர விரும்புகிறேன். அதற்கு முதல்வர் உதவ வேண்டும். அதேபோல என்னுடைய கைகளை மீண்டும் பொருத்தவும் முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும்.
எந்த சொத்தும் இல்லை
முதலமைச்சர் ஸ்டாலின் உதவினால் மட்டுமே என்னால் வாழ்வில் முன்னேற வேண்டும். எனக்கு வீடு, வாசல், சொத்து எதுவுமே இல்லை’’ என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ’’கண்ணீர் வேண்டாம் தம்பி! அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்’’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.06 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.