அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கம் செய்ய உள்ளார். இதன்படி, நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவு செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

2022-ல் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம்

இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டின் மதுரையில் தொடங்கப்பட்டது. பேரறிஞ்சர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று, 2022ஆம் ஆண்டு மதுரையில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் அனைத்துத் தரப்பிடமும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து  25.8.2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில்‌ உள்ள அரசுத்‌ தொடக்கப்‌ பள்ளியில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். இதன்‌ மூலம்‌ 30 ஆயிரத்து 992 பள்ளிகளில்‌ பயிலும்‌ 18 இலட்சத்து 50 ஆயிரம்‌ மாணவ மாணவியர்கள்‌ காலை உணவை சூடாகவும்‌ சுவையாகவும்‌ உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப்‌ பாடங்களில்‌கவனம்‌ செலுத்திப்‌ படித்து வருகிறார்கள்‌.

Continues below advertisement

கிராமப் பகுதிகளைத் தொடர்ந்து நகரப் பகுதிகளுக்கும் அரசுப் பள்ளிகளில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தற்போது  நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுவர்.

திட்டம் எப்போது தொடக்கம்?

இத்திட்டத்தை ஆகஸ்ட் 26அஅம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலமாக சுமார் 3.05 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்‌ தங்களது பள்ளிகளில்‌ காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளனர்‌. தமிழ்நாட்டின்‌ காலை உணவுத்‌ திட்டத்தை கனடா அரசும்‌, தங்களது நாட்டில்‌ நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.