நாடு முழுவதும் தேசியக் கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பு சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test-CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated Ll.B. மற்றும் Ll.M. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடக்கிறது.
அதேபோல தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நிலையில், 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்காக கிளாட் தேர்வு, டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
கிளாட் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், நவம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகத் தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிப்பது அவசியம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
கட்டணம் எவ்வளவு?
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம் கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.3,500 செலுத்த வேண்டியது முக்கியம்.
கூடுதல் தகவல்களுக்கு https://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
இளங்கலைப் படிப்புகளுக்கான தகுதி குறித்து அறிய: https://consortiumofnlus.ac.in/clat-2023/ug-eligibility.html என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
அதேபோல முதுகலைப் படிப்புகளுக்கான தகுதி குறித்து அறிய: https://consortiumofnlus.ac.in/clat-2023/pg-eligibility.html என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்க வேண்டியது அவசியம்.