மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு மாணவர்கள், பெயர்ப் பட்டியலை பதிவிறக்கம்‌ செய்து‌ திருத்தங்களை‌ மேற்கொள்ளலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ சேதுராம வர்மா, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.  


மார்ச்‌/ ஏப்ரல்‌ 2023 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின்‌ பெயர்ப் பட்டியலினை அடிப்படையாகக்‌ கொண்டு, நடைபெறவுள்ள 2023-2024 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விற்கான பள்ளி மாணவர்களின்‌ பெயர்ப் பட்டியல்‌ தயாரிக்கப்படவுள்ளது. எனவே, இதுகுறித்தான பின்வரும்‌ அறிவுரைகளை அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.


அனைத்து மேல்நிலை பள்ளித்‌ தலைமையாசிரியர்களும்‌ ௦3.11.2023 பிற்பகலில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்கள்‌ பள்ளிக்கு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தால்‌ வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணவர்களின்‌ நிரந்தரப்‌ பதிவண்‌, பெயர்‌, பிறந்த தேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள்‌ அடங்கிய பட்டியலை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.


1. பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட மாணவர்‌ விவரம்‌ அடங்கிய பட்டியலில்‌, தங்கள்‌ பள்ளியில்‌ பயிலும்‌ மாணவர்களது பெயர்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ (Initial and Spelling Mistake only), புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌, அதன்‌ விவரங்களை பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழின்‌ நகலுடன்‌ இணைத்து 10.11.2023 தேதிக்குள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. 


2. பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய பின்னர்‌, அரசிதழில்‌ பதிவுசெய்து பெயர்‌ மாற்றம்‌ செய்த மாணாக்கர்களுக்கு மட்டும்‌, பத்தாம்‌ வகுப்பு சான்றிதழில்‌ உள்ளவாறு இல்லாமல்‌ அரசிதழில்‌ உள்ளவாறு பெயரை மாற்றம்‌ செய்துகொள்ள அனுமதிக்கப்படும்‌. அவ்வகை மாணாக்கரது பெயர்‌ திருத்தம்‌ கோர அரசிதழின்‌ நகலை கண்டிப்பாக (புதுச்சேரி மற்றும் காரைக்கால்‌ மட்டும்‌ சம்பந்தப்பட்ட இணை இயக்குநர்‌ அலுவலகம்‌, முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌) மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.


3. பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட மாணவர்‌ விவரம்‌ அடங்கிய பட்டியலில்‌, மாணவர்‌ பெயர்‌, தலைப்பெழுத்து விடுபட்டிருப்பின்‌, தமிழில்‌ தவறாக இருப்பின்‌ அதனை முழுமையாக நீக்கம்‌ செய்து, மீண்டும்‌ யூனிகோட் எழுத்தில்‌ சரியான பெயரை தமிழில்‌ தட்டச்சு செய்தால்‌ மட்டுமே இதனை சரிசெய்ய இயலும்‌.


4. மாணவரது பெயர்ப்பட்டியலில்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்வதற்கு அம்மாணவருக்கு பெயர்ப் பட்டியலில்‌ வழங்கப்பட்டுள்ள ஜி.ஆர். எண்‌ குறிப்பிட்டு திருத்தங்கள்‌ குறித்த விவரங்களை மேற்கொள்ள வேண்டும்‌.


5. ஒரு பள்ளியில்‌ மேல்நிலை முதலாமாண்டு (+1) பயின்று, மார்ச்‌/ ஏப்ரல்‌ 2023-ல்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு தேர்வெழுதிய பின்னர்‌, மாற்றுச்‌ சான்றிதழ்‌ பெற்று வேறொரு பள்ளியில்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பில்‌ (+2) சேர்ந்து பயிலும்‌ மாணவரது பெயரை, தற்போது பன்னிரெண்டாம்‌ வகுப்பு (+2) பயிலும்‌ பள்ளியில்‌ மாணாக்கர்‌ பெயர்‌ பட்டியலில்‌ சேர்க்க இயலும்‌.


அவ்வாறு தற்போது +2 பயிலும்‌ பள்ளியின்‌ பெயர்ப்பட்டியலில்‌ சேர்க்க வேண்டுமெனில்‌, +1 மதிப்பெண்‌ பட்டியல்‌ நகல்‌, மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌ உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. ஆனால்‌, அம்மாணவர்‌ ஏற்கனவே +1 பயின்று தேர்வெழுதிய பாடத்‌ தொகுப்பு, பயிற்று மொழி மற்றும்‌ மொழிப்பாடம்‌ ஆகியவற்றில்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ மாற்றம்‌ செய்ய இயலாது.


7. பெயர்ப்பட்டியலில்‌ திருத்தங்கள்‌ மற்றும்‌ சேர்க்கை போன்றவற்றினை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.