முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகைத்‌ திட்டத்துக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில்‌ உள்ள மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சி திறனை வளர்க்கவும்‌ புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும்‌ முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகைத்‌ திட்டத்திற்கான தகுதித்‌ தேர்வு 2023 - 2024 ஆண்டு முதல்‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக நிதியுதவி அளிக்கும்‌ வகையில்‌ இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணவர்களிடமிருந்து 2023 - 2024 ஆம்‌ ஆண்டிற்கான முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகை தகுதித்‌ தேர்வுக்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலம் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக அக்டோபர் 20 முதல்‌  நவம்பர் 15 வரை விண்ணப்பித்தனர்.


யாரெல்லாம் விண்ணப்பித்தனர்?


முதுகலை முடித்து, முழுநேர முனைவர் படிப்பில் அரசுக் கல்லூரிகளில் சேர உள்ள தேர்வர்கள் மொத்தம் 4004 பேர் விண்ணப்பித்தனர்.


இதில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் பாடப் பிரிவுகளில் இருந்து 60 பேரும் அறிவியல் பாடப் பிரிவில் இருந்து 60 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு


முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகைக்‌ திட்டத்திற்கான தகுதித்‌ தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பதிவுக் கட்டணம் என எதுவும் வசூலிக்கப்படவில்லை. 


டிசம்பர் 10ஆம் தேதி அன்று முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகைக்‌ திட்டத்திற்கான தகுதித்‌ தேர்வு நடைபெற உள்ளது.


தேர்வு முறை எப்படி?


மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 100 ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதில் இரண்டு பகுதிகள் இடம்பெறும். முதல் பகுதியில் கொள்குறி வகையில் 40 மதிப்பெண்களுக்கு 40 கேள்விகள் கேட்கப்படும். நெகடிவ் மதிப்பெண்களும் உண்டு. இரண்டாவது பகுதியில் 2 மணி நேரத்துக்கு 60 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். 


இந்த நிலையில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள்‌ தங்களது யூசர் ஐடி மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசிநேர பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்‌டுள்ளது. எனவே, தேர்வர்கள்‌ தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினைப் பதிவிறக்கம்‌ செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


பெறுவது எப்படி?


* தேர்வர்கள் https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


* அதில், தங்களது யூசர் ஐடி மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.