சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வட கிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


வட கிழக்குப் பருவ மழை நாளை (அக்.15) தொடங்க உள்ள நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  கடலோர மாவட்டங்களுக்கும் கன மழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்


இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், கன மழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் அறிவுரைகள் வழங்கினார். 


நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


அதில், ’’நாளை (15.10.2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். 


15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


அதேபோல, ’’தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.


கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம்


கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.


கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்’’ என்றும்
தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.